மாவட்ட செய்திகள்

மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் + "||" + The sand quarry project on Vaigai river should be abandoned

மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
மானாமதுரை பகுதி வைகை ஆற்றுப்படுகையில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் இருந்து விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் மணல் திருட்டால் வைகை ஆறு பள்ளமாகவும், கால்வாய்கள் மேடாகவும் இருப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் இடைக்காட்டூர், செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி திறக்க பணிகள் நடந்து வருகின்றன. அரசு மணல் குவாரி அமைத்தால் குடிநீர் திட்டங்கள் கேள்விக்குறியாகி விடும். விவசாயமே செய்ய முடியாது. இதனால் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மானாமதுரையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி(மானாமதுரை தொகுதி) தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். பா.ஜனதா நகர செயலாளர் சங்கரசுப்பிரமணியன் வரவேற்றார். இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், ரஜினி மக்கள் மன்றம், திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாரியப்பன் கென்னடி பேசும்போது, நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதே மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அதற்கான பணிகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் மணல் குவாரி அமைக்க விடமாட்டோம் என்றார். பின்னர், அரசு மணல் குவாரி அமைக்கக்கூடாது, வைகை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும், மாவட்ட கலெக்டரை சந்தித்து மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு கொடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.