ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை தெளிவாக இல்லை: கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க ஐகோர்ட்டு யோசனை


ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை தெளிவாக இல்லை: கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க ஐகோர்ட்டு யோசனை
x
தினத்தந்தி 14 Jun 2018 5:00 AM IST (Updated: 14 Jun 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றிய அரசாணை தெளிவாக இல்லை. எனவே, தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் ஒரு கொள்கை முடிவு எடுத்து ஆணை பிறப்பிக்கலாம் என்று, மதுரை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.

மதுரை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஏப்ரல் மாதம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கடந்த மாதம் 22–ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பலியானவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்து தர வேண்டும் என்று ஏராளமான வழக்குகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வாறு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 14 வழக்குகள், நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் உயிரை மதிப்பிட முடியாது’’ என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வைகோவும் நேரில் வந்திருந்தார். அவர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், அஜ்மல்கான் வாதாடியதாவது:–

‘‘கடந்த மாதம் 28–ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதி ஆகிவிட்டது. மீண்டும் புதிதாக அனுமதி கொடுக்கவில்லை என்பதால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 48–வது பிரிவின் அடிப்படையில் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தீர்ப்பு ஆயத்திலோ அல்லது கோர்ட்டிலோ முறையீடு செய்து அனுமதி பெற்றால் தமிழக அரசு ஆணை செல்லுபடி ஆகாது. ஆலையை மீண்டும் இயக்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான காரணங்களை விளக்கமாக பட்டியலிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான இந்திய அரசியல் சட்டத்தின் 48–வது பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்போது தான் ஆலையை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும்.’’

இவ்வாறு அவர் வாதாடினார்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–

‘‘காற்று, தண்ணீர் சட்டப்பிரிவுகளின்கீழ் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்காததை மட்டுமே குறிப்பிட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் 48–வது பிரிவை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு வழங்கிய அரசு ஆணை திட்டவட்டமாகவும், தெளிவாகவும் இல்லை. எனவே அதை ஒரு கொள்கை முடிவாக எடுத்து தமிழக அரசு ஆணை பிறப்பிப்பதற்கு இந்த கோர்ட்டு யோசனை கூறுகிறது. இந்த யோசனையை தமிழக அரசுக்கு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும்.“

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

முன்னதாக, துப்பாக்கி சூடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த வக்கீல்கள், ‘‘ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர்’’ என்று தெரிவித்தனர்.

அதற்கு, ‘‘உரிய ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்தால் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றத்துக்கு வெளியே வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–

ஜூன் 6–ந் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, நான் செய்தியாளர்களிடம் என்ன கூறினேனோ அதுதான் இப்போது நடந்து இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு ஏஜெண்டாக செயல்படுகின்றது. அதை எதிர்த்து, 22 ஆண்டுகளாக நான் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகின்றேன்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22–ந்தேதி 50 ஆயிரம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியபோது, தமிழக அரசு காவல்துறையை ஏவி, ஈவு இரக்கமின்றி 13 பேரை சுட்டுக்கொன்றதுடன், பலரை படுகாயப்படுத்தி அடக்குமுறையை ஏவிவிட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளம் எரிமலையானதால், மக்கள் கொந்தளிப்புக்கு அஞ்சி, ஆலையை மூடுவதாக ஒரு கண் துடைப்பு நாடகத்தை நடத்தி, நீதிமன்றத்தில் செல்லுபடியாகாத அரசு ஆணையை பிறப்பித்துள்ளது.

ஆலையை இயக்குவதற்கு டெல்லி தீர்ப்பாயத்திலோ, நீதிமன்றத்திலோ ஸ்டெர்லைட் நிர்வாகம் உரிய நிலையை ஏற்படுத்திக்கொள்ளட்டும். அதன்பிறகு, நீதிமன்றம் கூறுவதால் நாங்கள் என்ன செய்யமுடியும்? என்று மக்களையும் ஏமாற்றி விடலாம் என திட்டமிட்டு தமிழக அரசு செயல்பட்டுள்ளது.

அதனால்தான் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு நீதிமன்றத்தில் ஆணை பெற்றாலும், லட்சக்கணக்கான மக்களை திரட்டி, மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் நடந்ததுபோல் தூத்துக்குடியிலும் அரங்கேற்றி, ஆலையை நிரந்தரமாக அகற்றுவோம் என்று கூறி வருகின்றேன். ஸ்டெர்லைட் பிரச்சினையில் தமிழக அரசின் முகத்திரை கிழிந்துவிட்டது.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.


Next Story