ஊட்டியில் அரசு விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட 594 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை நகராட்சி திட்டமைப்பு அதிகாரி தகவல்


ஊட்டியில் அரசு விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட 594 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை நகராட்சி திட்டமைப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2018 4:00 AM IST (Updated: 14 Jun 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அரசு விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட 594 கட்டிடங்கள் மீது சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நகராட்சி திட்டமைப்பு அதிகாரி இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 1993–ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு ஊட்டியின் அழகை பாதுகாக்கவும், மலைப்பகுதி கட்டிட விதிமுறைகளை ஒழுங்குப்படுத்தவும், மண்சரிவு மற்றும் நிலச்சரிவை தடுக்கவும் மாஸ்டர் பிளான் திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, நகராட்சி பகுதிகளில் வீடு கட்டுபவர்கள் வனத்துறை, வருவாய்த்துறை, மண்வள பாதுகாப்பு மற்றும் சுரங்கம் மற்றும் புவியியல் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் வர்த்தக கட்டிடம், வணிக வளாகம் கட்டக்கூடாது. 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடங்களை கட்டக்கூடாது.

வனப்பகுதி மற்றும் நீர்நிலைகளில் இருந்து 50 மீட்டர் தூரம் தள்ளி கட்டிடம் கட்ட வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டிடம் கட்டியவர்கள் மீது நகராட்சி, மலையிட பாதுகாப்புக்குழு, நகர்ப்புற வளர்ச்சி குழுமம், சென்னை ஐகோர்ட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி நகரில் பல கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்து கட்டிடத்திற்கான அனுமதியை பெறலாம் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஊட்டியில் கட்டிடங்கள் 7 மீட்டர் உயரத்துக்கு மேலும், வீட்டின் மேற்கூரை சாய்வுதளம் போன்று இல்லாமலும், குடியிருப்பு பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி வாங்கி விட்டு தங்கும் விடுதிகளாக மாற்றி இருப்பதும், அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டி இருப்பதும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வின் போது கண்டறியப்பட்டது.

சில கட்டிட உரிமைதாரர்களுக்கு சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மேல்முறையீடு செய்து, அதில் கட்டிடத்தில் சில மாற்றங்களை செய்யும் படியும், அதற்கான வரைபடங்கள் மற்றும் புகைப்படங்களை தாக்கல் செய்யக்கோரியும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சில கட்டிடங்களின் அனுமதி கோரிய மனுக்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படி வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்கின்றனர். இதனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று நகராட்சி திட்டமைப்பு அதிகாரி இளங்கோவன் தலைமையில் நகராட்சி கட்டிட ஆய்வாளர்கள் மீனாட்சி, பழனிசாமி மற்றும் அதிகாரிகள் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 3 தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க சென்றனர். அப்போது அறைகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளை காலி செய்யும் படி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் உடனடியாக சுற்றுலா பயணிகள் விடுதியை காலி செய்து விட்டு தங்களது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடனும், உடைமைகளுடனும் வெளியேறினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் 3 தங்கும் விடுதிகளை பூட்டி சீல் வைத்து நோட்டீசுகளை ஒட்டினர். ஒரு விடுதியின் நுழைவுவாயிலில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடம் சீல் வைக்கப்பட்டு உள்ளது என்று ஸ்டிக்கர் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி திட்டமைப்பு அதிகாரி இளங்கோவன் கூறியதாவது:–

ஊட்டி நகரில் விதிமுறைகளை மீறியும், வீடுகள் கட்ட அனுமதி வாங்கி தங்கும் விடுதிகளாக மாற்றியும் உள்ள 594 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. பொது கட்டிட விதியில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதன் காரணமாக அந்த 594 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஊட்டியில் 3 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து வருகிற 29–ந் தேதி வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஊட்டி நகர மக்கள் கூறும்போது, ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், அனுமதி இல்லாமலும், விதிமுறையை மீறியும் செயல்படும் தொழிற்சாலை மற்றும் சில வணிக வளாகங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல. எனவே, நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story