சமூக வலைதளம் மூலம் உத்தரவிடும் விவகாரம்: கிரண்பெடி–நாராயணசாமி மோதல் முற்றுகிறது
சமூக வலைதளங்கள் மூலம் உத்தரவிடும் விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் முற்றுகிறது.
புதுச்சேரி,
புதுவையில் கவர்னர் கிரண்பெடிக்கும் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. கவர்னர் தனக்கு வரும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டு வருகிறார்.
அதன்படி அதிகாரிகள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுகுறித்த விவரம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்குக்கூட தெரிவிக்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால் தங்களது துறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றிகூட அமைச்சர்களுக்கு தெரியாத நிலை உள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் பேட்டியளித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, சமூக வலைதளங்கள் மூலம் கவர்னர் இடும் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றக்கூடாது. எந்த புகாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கவர்னர் விளக்கம் கேட்டு அழைத்தால் அமைச்சரிடம் கலந்து ஆலோசித்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்று அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கவர்னரிடம் கடிதம் மற்றும் நேரிலும் இதுதொடர்பாக தெரிவித்துள்ளதாக நாராயணசாமி கூறினார். இதனை பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
இதற்கிடையே தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகங்கள் மாற்று சான்றிதழ் கொடுப்பதாக புகார்கள் வந்தன. இந்த புகார்கள் குறித்து விசாரிக்க கவர்னர் கிரண்பெடி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி தனியார் பள்ளி ஒன்றில் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது.
அரசின் செயல்பாடுகளுக்கு வாட்ஸ் அப் அங்கீகரிக்கப்படவில்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினாலும் 97866 68661 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த புகார்களை பட்டதாரி ஆசிரியர் கோபி கிருஷ்ணன் பெறுவார் என்றும் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் நாராயணசாமியின் எச்சரிக்கை எதையும் அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
மேலும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி இருந்தார். இதன்படி மணல் கடத்தல் குறித்தும், அதற்கு போலீஸ் அதிகரிகளே துணைபோய் வருவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் மீதான புகார்களை விசாரிக்கும் குழு விசாரிக்க உத்தரவிட்டு இருப்பதாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.