நேரத்தோடு பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் கந்தசாமி உத்தரவு
காரைக்கால் மாவட்டத்தில் நேரத்தோடு பணிக்கு வராத அரசுத்துறை ஊழியர்கள் மீது, துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். என புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட காமராஜர் அரசு வளாகத்தில், நேற்று புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, தனது துறைசார்ந்த (சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை) அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில், அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–
காரைக்காலில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் இரண்டு மாணவர்கள் விடுதிகளை இன்று ஆய்வு செய்ததில் திருப்தி இல்லை. குறிப்பாக, மாணவர்களின் கட்டில், படுக்கை, தலையணை மற்றும் ஆடைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக உள்ளது. விடுதியின் சுற்றுவட்டார பகுதிகளும் அவ்வாறே உள்ளது. இனி வரும் காலங்களில் காரைக்காலில் உள்ள அனைத்து மாணவர்கள் விடுதிகளையும் சிறப்பாக பராமரிக்கவேண்டும். புதுச்சேரியை போல், காரைக்காலில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, மாணவர்களை வழிநடத்தவேண்டும். பெரும்பாலான அரசுத்துறைகளில் 80 சதவீதம் ஊழியர்கள் நேரத்தோடு பணிக்கு வரவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இனி நேரத்தோடு பணிக்கு வராத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.
முன்னதாக, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் காரைக்கால் முல்லைநகர், திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் விடுதியை அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார். அதேபோல், காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தி½உள்ள குடிமைப்பொருள் வழங்கல்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசுதுறைகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ, கலெக்டர் கேசவன், சார்பு ஆட்சியர் விக்ராந்தராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.