காதல் விவகாரம் பிடிக்காததால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி


காதல் விவகாரம் பிடிக்காததால் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 14 Jun 2018 3:45 AM IST (Updated: 14 Jun 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

காதல் விவகாரம் பிடிக்காததால் இளம்பெண் மீது, அவரது சித்தப்பா பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்றார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் நந்தினி (வயது 19). இவர் திண்டுக்கல் மாவட்டம் காக்காதோப்பு பகுதியைச் சேர்ந்த தனது சித்தப்பா ராஜூ (58) வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது உறவினரான வெள்ளமரத்துப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அப்போது நந்தினியிடம் உங்கள் வீட்டுக்கு முறைப்படி வந்து பெண் கேட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று ரமேஷ் கூறியுள்ளார். இதற்கிடையில் இந்த காதல் விவகாரம் ராஜூக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் நந்தினியை கண்டித்தார். ஆனால் நந்தினி தனது காதலனை கரம்பிடிப்பதில் உறுதியாக இருந்தார்.

பெண் பார்க்கும் நிகழ்ச்சி

இந்நிலையில் ராஜூ மற்றும் அவரது மனைவி சரசு ஆகியோருடன் புறப்பட்டு தனது சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க நந்தினி வந்தார். அப்போது தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோருக்கு அவர் தெரிவித்தார். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. இந்நிலையில், தான் எவ்வளவு புத்திமதி கூறியும் அதற்கு நந்தினி செவிசாய்க்க மறுத்துவிட்டாரே? என ராஜூவுக்கு கோபம் ஏற்பட்டது.

பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

மேலும் நந்தினியை கொலை செய்ய அவர் திட்டமிட்டார். இதற்காக வீட்டின் அருகே அவரை வர சொன்னார். நந்தினி அங்கு வந்ததும், ராஜூ தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ மளமளவென பரவியதால் வலிதாங்க முடியாமல் அவர் கதறி துடித்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ராஜூவின் மீதும் தீப்பற்றியதால் அவர் காயமடைந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து நந்தினி மற்றும் ராஜூவை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் நந்தினி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிது. ராஜூவுக்கு குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜூ மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story