கீரனூர் அருகே கோர விபத்து: லாரிகள் மோதல்; 2 டிரைவர்கள் உள்பட 3 பேர் பலி


கீரனூர் அருகே கோர விபத்து: லாரிகள் மோதல்; 2 டிரைவர்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 9:32 PM GMT)

கீரனூர் அருகே லாரிகள் மோதி கொண்டதில் 2 டிரைவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்தின் போது சாலையில் சிதறிய செங்கல், அரிசி மூட்டைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீரனூர்,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு, திருச்சி நோக்கி லாரி ஒன்று வந்தது. அதனை புதுவயலை சேர்ந்த டிரைவர் ஜகுபர் சாதிக்(வயது 45) ஓட்டினார். இந்த லாரியில் புதுவயலை சேர்ந்த கலையரசன்(57) திருச்சி செல்வதற்காக லிப்ட் கேட்டு ஏறி வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே புதுக்கோட்டை-திருச்சி பைபாஸ் சாலையில் வந்தபோது, முன்னால் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதனை டிரைவர் ஜகுபர் சாதிக் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி மீது அரிசி மூட்டை ஏற்றி சென்ற லாரி மோதியது. இதனால் டிப்பர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. ஜகுபர் சாதிக் ஓட்டிய லாரி அதன் பின்னரும் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, எதிரே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு புதுக்கோட்டையை நோக்கி வந்த மற்றொரு லாரி மீதும் நேருக்கு நேர் மோதியது.

இதில் 2 லாரிகளின் முன்பகுதியும் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் புதுவயல் லாரி டிரைவர் ஜகுபர் சாதிக், திருச்செங்ககோடு லாரி டிரைவர் கிருஷ்ணன்(30) மற்றும் லிப்ட் கேட்டு வந்த கலையரசன் ஆகியோர் லாரிகளின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கினார்கள். அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். டிப்பர் லாரி கவிழ்ந்ததில் அதன் டிரைவர் பால்ராஜ்(35) கால் முறிந்தது. இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் கீரனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்லத்துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கால் முறிந்த டிப்பர் லாரி டிரைவர் பால்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து லாரிகளின் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்புபணி நடைபெற்றது. அதன் பின்னர் 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தின் போது லாரிகளில் இருந்த செங்கல்கள், அரிசி மூட்டைகள் சாலையில் சிதறின. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story