ரூ.27½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்


ரூ.27½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 14 Jun 2018 4:15 AM IST (Updated: 14 Jun 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

திருமழப்பாடியில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழாவில் பயனாளிகளுக்கு ரூ.27½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திருமழப்பாடி கிராமத்தில் மக்்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழா கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகைக்கான ஆணைகளையும், 12 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமணம் மற்றும் இயற்கை மரணம் உதவித்தொகைக்கான காசோலைகளையும் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

மேலும் வருவாய்த்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், 49 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், நத்தம் வீட்டுமனைப்பட்டா நகல் மற்றும் நத்தம் வீட்டுமனைப்பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 17 பயனாளிகளுக்கு இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்றுகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 97 ஆயிரத்து 500 மதிப்பில் பயிர் கடனுக்கான காசோலைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் திருமானூர் ‘ஏ’ உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் டிராக்டர் மற்றும் 1 பயனாளிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் ரோட்டவேட்டர் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

இந்த முகாம் நிறைவு விழாவில் மொத்தம் ரூ.27 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில், வேளாண்மைத்துறை, கால்நடைப்பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பாக பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் திட்ட விளக்கி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகேஷ்வரி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன் வரவேற்றார். முடிவில் அரியலூர் தாசில்தார் முத்து லெட்சுமி நன்றி கூறினார். 

Next Story