எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் - தங்கதமிழ்செல்வன்


எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் - தங்கதமிழ்செல்வன்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:30 PM GMT (Updated: 13 Jun 2018 9:33 PM GMT)

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்றும், நீதிமன்றத்தின் மீது 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது என்றும் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.

தேனி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரை சந்தித்து மனு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், கடந்த ஜனவரி மாதம் தள்ளி வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும்? தீர்ப்புக்கு பிறகு எந்த மாதிரியான செயல்பாடு இருக்கும்? என்பது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரும், அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளருமான தங்கதமிழ்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நீதிமன்றம் மீது எங்களுக்கு 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. முதல்-அமைச்சர் மீது ஏற்பட்ட அதிருப்தியில் அவரை மாற்ற வேண்டும் என்று தான் கவர்னரிடம் மனு கொடுத்தோம். அரசுக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை.

எனவே தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் மக்கள் ஆதரவோடு மீண்டும் சட்டமன்றத்துக்கு செல்வோம். ஒருவேளை தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்தால், எங்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. மக்கள் செல்வாக்கை நிரூபித்து, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றோம்.

தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு உள்ளது. எனவே மீண்டும் அதே தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்தித்து மக்கள் ஆதரவோடு மகத்தான வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்றத்துக்குள் நுழைவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், தகுதிநீக்கம் செய்யப்பட்ட மற்றொரு எம்.எல்.ஏ.வான டாக்டர் கதிர்காமுவிடம் (பெரியகுளம்) கேட்டபோது, ‘நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்லபடியாக வரும். ஆண்டவனின் தீர்ப்பு, நீதிதேவதையின் தீர்ப்பு நல்லபடியாக வரும் என நம்புகிறேன்’ என்றார்.

Next Story