சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்வது ஏன்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் விளக்கம்


சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு செய்வது ஏன்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் விளக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:00 PM GMT (Updated: 13 Jun 2018 9:35 PM GMT)

சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளி நடப்பு செய்வது ஏன்? என்பதற்கு திருவாரூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர்,

கடலூரில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ‘போராடுவோம் தமிழகமே’ என்ற பிரசார இயக்க வாகனம் நேற்று திருவாரூர் வந்தது. திருவாரூர் பஸ் நிலையம் அருகில் இந்த பிரசார வாகனத்திற்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தினால் சுடுகாடு ஆகிவிடும் என ஒருவர் கூறுகிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் போன்றவர்கள், போராடுபவர்கள் சமூக விரோதிகள் என கூறுகிறார்கள். வாழ்வாதாரங்களை பாதுகாத்து கொள்வதற்காக போராடுகிறவர்கள் எல்லாம் சமூக விரோதிகளா?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம், கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து போராடினால் துப்பாக்கியால் சுடுவோம் என அரசு மக்களை மிரட்டுகிறது.

முதல்-அமைச்சர் பழனிசாமி இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் இருந்து தண்ணீரை கோடை காலத்தில் முழுமையாக பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

குறிப்பாக 30.56 டி.எம்.சி. தண்ணீர் ஜனவரி மாதத்தில் இருந்ததாக கூறும் கர்நாடக அரசு, ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி தண்ணீர் இருப்பதாக கூறுகிறது. கோடை காலத்தில் அணைகளில் உள்ள தண்ணீரை கர்நாடக அரசு முழுமையாக பயன்படுத்துகிறது. இதனை தடுக்க தமிழக அரசு காவிரி ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் வாலண்டினா, மாரிமுத்து, நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், சேகர், கந்தசாமி, கலைமணி, மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தி அரசியல் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது. மிரட்டல் இருக்குமானால் பாதுகாப்பை அதிகரிப்பதை விட்டு விட்டு ஏன் இதனை ஊடகத்திடம் தெரிவிக்க வேண்டும். மோடியின் செல்வாக்கு குறைந்து விட்டதை சரிசெய்யவே அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர்.

உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வருகிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையை ஊழல் நல்வாழ்வுத்துறை என பெயர் மாற்றம் செய்து விடலாம். மக்கள் பிரச்சினைகள் பற்றி சட்டசபையில் பேசவிடாத காரணத்தால் தான் தி.மு.க. வெளிநடப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட் களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை, தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாதது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story