நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு நல்ல மழை: கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு நல்ல மழை: கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 14 Jun 2018 4:29 AM IST (Updated: 14 Jun 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வருகிறது.

பெங்களூரு,

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது அணைகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா, ஆலூர் தாலுகாக்களில் நல்ல மழை பெய்து வருவதால் ஹேமாவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக ஹேமாவதி ஆற்று கரையோரம் உள்ள ஒலேமல்லேஸ்வரசாமி கோவில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் ஹேமாவதி அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 2,922.00 அடி உயரம் கொண்ட(கடல் மட்டத்தில் இருந்து) ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2,888.54 அடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதேநாளில் அணையின் நீர்மட்டம் 2,853.23 அடியாக இருந்தது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 37,946 கனஅடி வீதம் தண்ணீர் வருவதுடன், அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும், நேற்றைய நிலவரப்படி 2,284.00 அடி உயரம் கொண்ட(கடல் மட்டத்தில் இருந்து) கபினி அணையின் நீர்மட்டம் 2,273.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 23,487 கனஅடி வீதம் தண்ணீர் வருவதுடன், அணையில் இருந்து 363 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஆண்டு இதேநாளில் கபினி அணையின் நீர்மட்டம் 2,248.65 அடியாக இருந்தது.

கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, கபினி உள்பட கர்நாடகத்தில் உள்ள 13 முக்கிய அணைகளின் நீர்மட்டம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சில அணைகள் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் நிலையில் உள்ளன. இதன் காரணமாக கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story