மாவட்ட செய்திகள்

இலவச பஸ் பாஸ் திட்டம் மறுபரிசீலனை: மந்திரி டி.சி.தம்மண்ணா தகவல் + "||" + Free Bus Pass Review Review: Minister D.C. Tammanna informed

இலவச பஸ் பாஸ் திட்டம் மறுபரிசீலனை: மந்திரி டி.சி.தம்மண்ணா தகவல்

இலவச பஸ் பாஸ் திட்டம் மறுபரிசீலனை: மந்திரி டி.சி.தம்மண்ணா தகவல்
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.626 கோடி நஷ்டம் உண்டாகும் என்பதால், மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை இலவச பஸ் பாஸ் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து மந்திரி டி.சி.தம்மண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-


சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்திற்கு நிதித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அந்த திட்டத்தின் சாதக-பாதகங்கள் குறித்து ஆய்வு நடத்தி அதை மறுபரிசீலனை செய்வேன். அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே ரூ.500 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

அதனால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்தினால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.626 கோடி நஷ்டம் ஏற்படும். இதுகுறித்து வருகிற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும். பள்ளி-கல்லூரி வளாகத்திலேயே சலுகை கட்டண பஸ் பாஸ்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் பள்ளி-கல்லூரிகளில் சேரும்போது அவர்களுடைய விவரங்கள் கல்வித்துறையின் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அந்த தகவல்கள் தானாகவே போக்குவரத்து துறைக்கு கிடைத்துவிடும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு சலுகை கட்டண பாஸ் வழங்கப்படும். இந்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு தேவையான பஸ் பாஸ்கள் வழங்கப்படும்.

இந்த சலுகை கட்டண பஸ் பாஸ்களை பெற உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மாதம் ரூ.600-ம், மாணவர்கள் ரூ.800-ம், கல்லூரி மாணவ-மாணவிகள் ரூ.1,100-ம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. அவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் செயல்பாட்டு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். இவ்வாறு டி.சி.தம்மண்ணா கூறினார்.