காயல்பட்டினம் ஆஸ்பத்திரியில் பூட்டை உடைத்து பணத்தை திருடியவர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு
காயல்பட்டினம் ஆஸ்பத்திரியில் பூட்டை உடைத்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் ஆஸ்பத்திரியில் பூட்டை உடைத்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் திருட்டு
காயல்பட்டினம்– திருச்செந்தூர் ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 8–ந்தேதி இரவில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். பின்னர் கடந்த 10–ந்தேதி இரவில் ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். கார்டன் காலனியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். மேலும் அதன் அருகில் உள்ள 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்தது.
இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக ஆறுமுகநேரி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று மதியம் காயல்பட்டினம் ஓடக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு காட்டு பகுதியில் பதுங்கி இருந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
பானிபூரி வியாபாரி கைது
விசாரணையில் அவர், காயல்பட்டினம் காட்டு மொகதும் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த பானிபூரி வியாபாரியான அஜ்மீர்கான் (வயது 44) என்பதும், இவர் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து காயல்பட்டினம் தனியார் ஆஸ்பத்திரியில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்தை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. எனவே அஜ்மீர்கானை போலீசார் கைது செய்தனர்.
திருடிய பணத்தில் தனக்கு கிடைத்த பங்கின் மூலம் அஜ்மீர்கான், ஏரலில் உள்ள நகைக்கடையில் 1½ பவுன் மதிப்பிலான தங்க சங்கலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை வாங்கி உள்ளார். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான அஜ்மீர்கானை போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story