கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு


கோவில்பட்டி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 15 Jun 2018 2:30 AM IST (Updated: 14 Jun 2018 8:21 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

வரத்து குறைவு

கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு தினமும் ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து குறைந்ததால், அவற்றின் விலை உயர்ந்து உள்ளது. கோவில்பட்டி மார்க்கெட்டில் கடந்த வாரம் மொத்த விலையில் கிலோ ரூ.35–க்கு விற்ற நாட்டு வெங்காயம் விலை உயர்ந்து நேற்று கிலோ ரூ.45–க்கும், சில்லறை விலையில் ரூ.50–க்கும் விற்கப்படுகிறது. பல்லாரி மொத்த விலையில் கிலோ ரூ.17–க்கும், சில்லறை விலையில் ரூ.20–க்கும் விற்கப்படுகிறது.

கடந்த வாரம் மொத்த விலையில் கிலோ ரூ.30–க்கு விற்ற முருங்கைக்காய் நேற்று ரூ.40–க்கும், சில்லறை விலையில் ரூ.45–க்கும் விற்கப்படுகிறது. கத்தரிக்காய் மொத்த விலையில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையிலும், சில்லறை விலையில் ரூ.35–க்கும் விற்கப்படுகிறது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.220 வரையில் விற்கப்படுகிறது.

விலை விவரம்

கடந்த வாரம் மொத்த விலையில் ரூ.45–க்கு விற்ற பீன்ஸ், ரூ.55 ஆக விலை உயர்ந்து உள்ளது. வெண்டைக்காய் மொத்த விலையில் கிலோ ரூ.6 முதல் ரூ.7 வரையிலும் விற்கப்படுகிறது. அவரைக்காய் மொத்த விலையில் கிலோ ரூ.35–க்கும், சில்லறை விலையில் ரூ.45–க்கும் விற்கப்படுகிறது. கேரட் மொத்த விலையில் கிலோ ரூ.30–க்கும், சில்லறை விலையில் ரூ.35–க்கும் விற்கப்படுகிறது.

மொத்த விலையில் பீட்ரூட் கிலோ ரூ.18–க்கும், முள்ளங்கி ரூ.20–க்கும், முட்டைக்கோஸ் ரூ.13–க்கும், உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.30 வரையிலும், புடலங்காய் ரூ.15–க்கும், சுரைக்காய் ரூ.8–க்கும் விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி மார்க்கெட் மொத்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story