சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுப்பது ஒருநாள் தடைபட்டது - கோவையில், குடிநீர் வினியோகம் பாதிப்பு


சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுப்பது ஒருநாள் தடைபட்டது - கோவையில், குடிநீர் வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2018 11:15 PM GMT (Updated: 14 Jun 2018 6:57 PM GMT)

பலத்த மழை காரணமாக நீர்வரத்து பாதையில் மண் அடைத்துக்கொண்டதால் சிறுவாணி அணை யில் இருந்து குடிநீர் எடுப்பது ஒருநாள் தடைபட்டது. இதனால் கோவையில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

கோவை,

கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடு வென்று உயர்ந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து தினமும் எடுக்கப்படும் குடிநீரின் அளவு 7½ கோடி லிட்டரில் இருந்து 9½ கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நேற்று ஒரேநாளில் ஒரு மீட்டர் உயர்ந்து அணையின் நீர்மட்டம் 41¾ அடியாக உயர்ந்தது. நீர்பிடிப்பு பகுதியில் 120 மி.மீட்டரும், அடிவாரத்தில் 44 மி.மீட்டர் மழையும் பதிவானது.

பில்லூர் அணையில் மோட்டார் பம்புகள் மூலம் நீர் பம்ப் செய்யப்பட்டு குடிநீர் எடுக்கப்படுகிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 800 அடி உயரத்தில் உள்ள சிறுவாணி அணையில் இருந்து புவியீர்ப்பு விசை காரணமாக தண்ணீர் தானாகவே மேலிருந்து கீழ் நோக்கி வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு குகை பாதை வழியாக தானாக வரும் தண்ணீர் அதன் பின்னர் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்தவெளி வாய்க்கால் வழியாக சிறுவாணி அடிவாரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்குள்ள சிறிய தடுப்பணையில் பொருத்தப்பட்டுள்ள வலை அமைப்பு வழியாக தண்ணீர் வெளியேறி சுத்திகரிப்பு நிலையத்தை வந்தடைகிறது.

அங்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அதன் பின்னர் குழாய்கள் மூலம் புவியீர்ப்பு விசை காரணமாக சாய்பாபா காலனியில் உள்ள காந்திபார்க் தரைத்தளம் தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. சிறுவாணி அணையில் இருந்து காந்தி பார்க் வரும் வரை சிறுவாணி தண்ணீரை கொண்டு வருவதற்கு செலவு ஏதும் கிடையாது. சிறுவாணி அணையில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் வரை உள்ள 5½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீரை நிறுத்துவதற்கு ‘வால்வு’ கிடையாது. இதனால் குகைப்பாதை மற்றும் திறந்தவெளி வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பிறகு தண்ணீர் முழுவதும் குழாய்களில் கொண்டு வரப்படுவதால் வால்வுகள் பொருத்தப்பட்டு தேவைப்படும் போது திறந்து விடவும், தேவைப்படாத நேரங்களில் மூடவும் முடியும்.

சிறுவாணி அணையில் இருந்து குகைப்பாதை, திறந்தவெளி வாய்க்கால் வழியாக வந்து சுத்திகரிப்பு நிலையத்தில் வந்து சேரும் இடத்தில் உள்ள சிறிய தடுப்பணையில் அதிக அளவில் மண் சேர்ந்து உள்ளதால் தண்ணீர் வருவது கடந்த 12-ந் தேதி நள்ளிரவு தடைபட்டது. இதனால் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் வருவது நின்றது.

இதுகுறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் பணியாளர்களை அழைத்துக் கொண்டு மண் சேர்ந்து அடைத்துக்கொண்ட இடத்துக்கு நள்ளிரவில் சென்றனர். யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அந்த இடத்திற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டு போய் சேர்ந்தனர்.

பொக்லைன் எந்திரங்கள் கொண்டு செல்ல முடியாத அந்த இடத்தில் பணியாளர்கள் மூலம் மண் அகற்றும் பணி நடைபெற்றது. 13-ந் தேதி மாலை 5 மணி வரை மண் முழுவதும் அகற்றப்பட்ட பின்னர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.

இதன் காரணமாக 12-ந் தேதி நள்ளிரவு முதல் 13-ந் தேதி மாலை 5 மணி வரை சிறுவாணி குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால் கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

Next Story