கருவில் இருக்கும் குழந்தையை கண்டறியும் மையங்கள் மீது நடவடிக்கை கலெக்டர் தகவல்


கருவில் இருக்கும் குழந்தையை கண்டறியும் மையங்கள் மீது நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2018 4:30 AM IST (Updated: 15 Jun 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டறியும் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மஞ்சங்காரணை ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகுழு முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 115 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 3 பேருக்கு திருமண உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் கலெக்டர் சுந்தரவல்லி பேசும்போது கூறியதாவது.

தமிழக அரசின் முக்கிய திட்டமான முழு சுகாதார திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் நிறைவேற்றும் விதமாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். முழு சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரத்தில் கழிவறை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த கிராமத்தில் 39 வீடுகளில் கழிவறை வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே இந்த வீடுகளில் கழிவறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே நோயின்றி வாழ கழிவறையை பயன்படுத்த வேண்டும். தமிழக அரசு வருகிற ஜனவரி மாதம் முதல் மக்காத குப்பையான பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் துணிப்பையை பயன்படுத்த தற்போதே முன் வரவேண்டும். பெண்கள் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பில் முன்னேற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டறியும் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு பேறுகால உதவித்தொகை, அம்மா பெட்டகம், தாலிக்கு தங்கம், அம்மா இரு சக்கர வாகன திட்டம் என்று பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பு, முழு சுகாதார திட்டத்தில் கழிவறை இல்லா மாவட்டமாக மாற்றுவது, பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை கண்காணிப்பது ஆகிய மூன்றையும் நமது மாவட்ட நிர்வாகம் செம்மையாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் மகேந்திரன், ரவி, கிராம நிர்வாக அதிகாரி சோபன், ஊராட்சி உதவியாளர் பொன்னரசு உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story