கோவை மாவட்டத்தில் ரத்த தானம் மூலம் 18,535 யூனிட் ரத்தம் சேகரிப்பு - கலெக்டர் தகவல்


கோவை மாவட்டத்தில் ரத்த தானம் மூலம் 18,535 யூனிட் ரத்தம் சேகரிப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2018 11:30 PM GMT (Updated: 14 Jun 2018 7:02 PM GMT)

கோவை மாவட்டத்தில் ரத்த தானம் மூலம் 18,535 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஹரிகரன் கூறினார்.

கோவை,

உலக ரத்த தான தினத்தையொட்டி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் ஹரிகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஜூன் 14-ந் தேதி உலக ரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகின்றது. தற்போது ரத்த தானம் தொடர்பாக இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். கர்ப்பிணிகளுக்கும், அறுவை சிகிச்சை மேற்கொள் வோருக்கும், விபத்து காலங்களில் ரத்தம் தேவைப்படுவோருக்கு எவ்வித தடையுமின்றி ரத்தம் கிடைக்க செய்ய வேண்டும்.

இதற்கு ரத்த கொடையாளர்கள் அதிக அளவி்ல் முன்வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ரத்ததானம் செய்வோர், உயிர்காக்கும் உன்னத பணியை மேற்கொள்கிறவர்கள் ஆவர்.

கோவை மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள் மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் அரசு ரத்த வங்கிகளும், 19 தனியார் ரத்த வங்கிகளும் 6 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

அரசு ரத்த வங்கிகள் சார்பில் 2017-18-ம் ஆண்டில் 196 முகாம்கள் நடத்தப்பட்டு 18,535 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் இணையதளம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளில் ரத்த சேகரிப்பு குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். மேலும் ரத்த கொடையாளர்களும் பதிவு செய்து கொள்ளலாம். இது ரத்தம் தேவைப்படுவோருக்கும், தன்னார்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு கலெக்டர் ஹரிகரன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, மாவட்ட ரத்த பரிமாற்ற குழும அதிகாரி மங்கையர் கரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story