தொடர் மழையால் ஊட்டி ரெயில்வே குடியிருப்பு பகுதியில் மண் சரிவு - சாலையில் திடீர் பள்ளம்


தொடர் மழையால் ஊட்டி ரெயில்வே குடியிருப்பு பகுதியில் மண் சரிவு - சாலையில் திடீர் பள்ளம்
x
தினத்தந்தி 14 Jun 2018 11:00 PM GMT (Updated: 14 Jun 2018 7:15 PM GMT)

தொடர் மழையால் ஊட்டி ரெயில்வே குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. சாலையில் திடீர் பள்ளம் காணப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், பந்தலூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஊட்டி உசில்மேடு பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதை அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

ஊட்டி காபிஹவுஸ் பின்பகுதியில் குடியிருப்புகள் அருகே திடீரென நேற்று முன்தினம் நள்ளிரவு பள்ளம் ஏற்பட்டது. இதனை காலையில் எழுந்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மழை பெய்ய, பெய்ய பள்ளம் பெரிதாகிக்கொண்டே போனது. அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய்க்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அதன் காரணமாக ஏற்பட்ட பள்ளமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் ஊட்டி ரெயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கான நவீன பயிற்சி மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் புதிதாக தேர்வு செய்யப்படும் டி-கிரேடு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் மண் அகற்றப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் ரெயில்வே குடியிருப்புக்கு செல்லும் சாலையில் ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்டு இருந்தது. தற்போது தொடர் மழை காரணமாக அதிகளவில் மண் சரிந்து உள்ளது. அப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால், அடிக்கடி மண் சரிந்து வருகிறது. அங்குள்ள சாலையே பெயர்ந்து விட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள பழமையான ரெயில்வே குடியிருப்பு ஒன்றின் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரம் முடிவடைந்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

குன்னூர்-3.6, கூடலூர்-51, குந்தா-14, கேத்தி-8, கோத்தகிரி-4.4, நடுவட்டம்-26.5, ஊட்டி-22.2, கல்லட்டி-12, கிளன்மார்கன்-15, அப்பர்பவானி-51, எமரால்டு-17, அவலாஞ்சி-50, கெத்தை-12, கிண்ணக்கொரை-2, கோடநாடு-22, தேவாலா-54, பர்லியார்-2 என மொத்தம் 366.7 மழை பெய்து உள்ளது. இது சராசரியாக 21.57 மில்லி மீட்டர் ஆகும்.

Next Story