8 பேரை பலிகொண்ட பஸ் விபத்து நடந்தது எப்படி? - விபத்தில் படுகாயத்துடன் உயிர் தப்பியவர் பேட்டி


8 பேரை பலிகொண்ட பஸ் விபத்து நடந்தது எப்படி? - விபத்தில் படுகாயத்துடன் உயிர் தப்பியவர் பேட்டி
x
தினத்தந்தி 15 Jun 2018 4:45 AM IST (Updated: 15 Jun 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

8 பேரை பலிகொண்ட பஸ் விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து விபத்தில் படுகாயத்துடன் உயிர் தப்பியவர் பேட்டியளித்தார்.

ஊட்டி,

ஊட்டி மலைப்பாதையில் அரசு பஸ் உருண்டதில் 8 பேர் பலியானார்கள். விபத்துக்குள்ளான பஸ்சில் பயணம் செய்து, படுகாயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் குன்னூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் மாரிமுத்து கூறியதாவது:-

நான் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றேன். ஊட்டி கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்பாக எனது நண்பர் பாலசந்தருடன் இன்று (நேற்று) காலையில் ஊட்டிக்கு வந்தேன். பின்னர் நாங்கள் இருவரும் வந்த வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் குன்னூர் செல்வதற்காக ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்று கொண்டு இருந்தோம். அப்போது பஸ் மந்தாடா புதுலைன் பேருந்து நிறுத்தம் வந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிட்டு பஸ் 10 அடி தூரம் தான் சென்றிருக்கும்.

அப்போது பஸ்சின் முன்பக்கத்தின் அடிப்பகுதியில் இருந்து திடீரென ‘டமால்‘ என்ற சத்தம் கேட்டது. அதற்குள் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கமாக ஓடி மலைப்பாதையோர பள்ளத்தில் தலை குப்புற பாய்ந்தது. பள்ளத்தின் ஓரத்தில் இருந்த ஒரு சீகை மரத்தின் மீது மோதியவாறு தலைகுப்புற நின்றது. அப்போது பஸ் டிரைவர் உள்பட பலர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு பள்ளத்திற்குள் விழுந்தனர்.

அதில் நானும் எனது நண்பரும் விழுந்தோம். இதனை தொடர்ந்து அந்த பஸ் அந்த மரத்தில் இருந்து பல்டியடித்தவாறு பள்ளத்திற்குள் விழுந்தது. அப்போது அதில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா என்று கூச்சல்போட்டனர். பஸ்சின் முன்பக்க கண்ணாடி வழியாக வந்தபோது மரக்கிளைகள் எனது தலையில் பட்டு படுகாயம் அடைந்தேன். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன். பள்ளத்தில் பாய்வதற்கு முன்பு பஸ்சின் அடிப்பகுதியிலிருந்து டமார் என்று சத்தம்கேட்டதால் ஏதாவது எந்திர பாகம் உடைந்து இருக்கலாம்.அதனால் பஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம். அல்லது ரோட்டின் ஓரத்தில் இருந்த பாறை அல்லது தடுப்பில் மோதி இந்த சத்தம் கேட்டு இருக்கலாம். பஸ் சுக்குநூறாக நொறுங்கி விட்டதால் பஸ்சில் கோளாறு இருந்ததா? என்பதை கண்டுபிடிப்பது கஷ்டம். என்றாலும் மலைப்பாதையில் இயக்கும் பஸ்களை மிகவும் கவனமுடன் பரிசோதனை செய்து இயக்குவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறும்போது, ஊட்டியில் இருந்து குன்னூருக்கு சென்ற அரசு பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர். விபத்து ஏற்பட்ட போது, சிறு காயங்கள் அடைந்த 4 பயணிகள் தாங்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக சென்று விட்டனர். இந்த விபத்தில் 8 பேர் இறந்து விட்டனர். பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட படுகாயம் அடைந்தவர்களுக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

மேலும் நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை உத்தரவின்படி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுரேஷ்குமார் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ சிகிச்சை, சட்ட உதவிகள், தேவைகள் குறித்து படுகாயம் அடைந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

கண்டக்டரின் பையில் இருந்த பணம் திருட்டு

நேற்று காலை 11.35 மணியளவில் அரசு பஸ் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள், போலீசார் வருவதற்கு முன்பே அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள், வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சேறும், சகதியுமான அப்பகுதியில் கீழே இறங்கி, பயணிகளை மீட்டு ஊட்டி-குன்னூர் சாலைக்கு கொண்டு வந்தனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய அரசு பஸ் கண்டக்டரின் பணப்பை தவறி விழுந்தது. இதையடுத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட போது, கண்டக்டர் பணப்பை இருந்தது. ஆனால் அதற்குள் பணம் இல்லை. டிக்கெட் மட்டுமே இருந்தது. விபத்தில் பலர் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததை பார்த்த பிறகும் கண்டக்டரின் பையில் இருந்த பணத்தை யாரோ திருடி சென்றது மனிதாபிமானமற்ற மனிதர்கள் இருப்பதையே காட்டுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காய்கறிகள், குடைகள் சிதறிகிடந்தன


அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் தங்களது வீட்டு சமையலுக்கு தேவையான பீட்ரூட், கேரட் உள்ளிட்ட காய்கறிகள், துவரம் பருப்பு, மாம்பழம் போன்றவற்றை வாங்கி சென்று உள்ளனர். ஊட்டி யில் தொடர் மழை பெய்வதால் அவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை வைத்திருந்தனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சிலர் மலைக்காய்கறிகளை வாங்கி உள்ளனர்.

அரசு பஸ் 150 அடி பள்ளத்தில் உருண்டதில், பஸ்சின் மேற்கூரை ஒருபுறமும், அடிப்பாகம் ஒருபுறமும் உடைந்து விழுந்தது. டிரைவர் இருக்கை, பேட்டரி, முதலுதவி பெட்டி ஆகியவை தோட்டத்தின் ஒரு பகுதியில் கிடந்தன. மேலும் பயணிகள் வாங்கி வந்த காய்கறிகள், குடைகள், செருப்புகள் ஆகியவை ஆங்காங்கே சிதறி கிடந்தன.

கோபமாக பேசிய போலீசாருக்கு அறிவுரை

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருவதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் 6-ம், சமூக சேவையாற்றும் தனியார் ஆம்புலன்சுகள் 16-ம் இயக்கப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை சேர், ஸ்ட்ரெச்சரில் அமர வைத்து ஆஸ்பத்திரிக்குள் கொண்டு சென்றனர். கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களுக்கும் உதவினர்.

அப்போது ஊட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த போலீசார் சிலர், மீட்பு பணிகளில் ஈடுபட் டவர்களை வெளியே போங்கள் என்று கோபமாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி கொண்டு வந்த எங்களை மிரட்டுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது அங்கு வந்த ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி, உதவி செய் பவர்களிடம் கோபமாக பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

செல்பி எடுத்தவர்களுக்கு எச்சரிக்கை

ஊட்டி-குன்னூர் சாலையில் விபத்து நடந்த மந்தாடா பகுதியில் பள்ளத்தில் விழுந்த அரசு பஸ்சை பார்க்க பொதுமக்கள் குவிந்தனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு, பள்ளத்தில் உருண்ட பஸ்சை செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் அங்குள்ள பாதை வழியாக கீழே இறங்கி பஸ் முன் நின்று செல்பி எடுத்தனர்.

அவர்களை போலீசார் எச்சரித்து அங்கிருந்த அனுப்பியதோடு, கூட்டத்தையும் கட்டுப்படுத்தினர். சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Next Story