மாவட்ட செய்திகள்

காதலியை கத்தியால் குத்திவிட்டு நாடகம் ஆடிய காதலன் கைது + "||" + Girlfriend knife Poke The boyfriend of the play was arrested

காதலியை கத்தியால் குத்திவிட்டு நாடகம் ஆடிய காதலன் கைது

காதலியை கத்தியால் குத்திவிட்டு நாடகம் ஆடிய காதலன் கைது
வேறு ஒரு வாலிபரை காதலிப்பதாக கூறியதால் ஆத்திரத்தில் காதலியை கத்தியால் குத்திவிட்டு, வடமாநில வாலிபர்கள் குத்தியதாக நாடகம் ஆடிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,

எண்ணூரை அடுத்த எர்ணாவூர் எர்ணீஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கவியரசன்(வயது 22). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரும், திருவொற்றியூரைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது.


இதற்கிடையில் அந்த பெண், வேறு ஒரு வாலிபருடன் செல்போனில் சிரித்து பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த கவியரசன், தனது காதலியை எண்ணூர் ரெயில் நிலையம் அருகே வரவழைத்து இதுபற்றி கேட்டார். இதனால் காதலர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கவியரசன், தனது காதலியின் முகத்தில் கத்தியால் குத்தினார். பின்னர் படுகாயம் அடைந்த தனது காதலியை அவரே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த எண்ணூர் போலீசார், கவியரசனிடம் விசாரித்தனர். அப்போது அவர், “நாங்கள் 2 பேரும் எண்ணூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கோவில் அருகில் நின்று பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த வட மாநில வாலிபர்கள் 4 பேர் எனது காதலியின் முகத்தில் கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்று விட்டனர்” என்றார்.

ஆனால் அவர், போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், “எனது காதலி வேறு ஒரு வாலிபரை காதலிப்பதாக கூறியதால் ஆத்திரத்தில் நான், எனது காதலியின் முகத்தில் கத்தியால் குத்தி விட்டேன். இது தெரிந்தால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் வடமாநில வாலிபர்கள் கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்துச்சென்றதாக நாடகம் ஆடினேன்” என ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலியை கத்தியால் குத்தியதாக அவருடைய காதலன் கவியரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.