மாவட்ட செய்திகள்

3 இடங்களில் சூரியஒளி மின் நிலையம் அமைப்பு - மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார் + "||" + In 3 locations, the solar power plant - Union Minister Pius Goyal devoted to the country

3 இடங்களில் சூரியஒளி மின் நிலையம் அமைப்பு - மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

3 இடங்களில் சூரியஒளி மின் நிலையம் அமைப்பு - மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
என்.எல்.சி. நிறுவனம் சார்பில் 3 இடங்களில் புதிதாக சூரியஒளி மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார்.
நெய்வேலி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நெய்வேலியில் 140 மெகாவாட் திறன்கொண்ட சூரியஒளி மின் நிலையத்தையும், நெல்லை மாவட்டம் கழநீர் குளத்தில் 51 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தையும், ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பசுமை மின் சக்தியின் அளவை 4,251 மெகாவாட்டாக அதிகரிக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.5,343 கோடி மதிப்பில் 1,209 மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின் திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


இதில் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகில் தொப்பளாக்கரை, சேதுபுரம் மற்றும் நெல்லை மாவட்டம் செல்லையா செழியநல்லூர் ஆகிய இடங்களில் தலா 100 மெகாவாட் மின் திட்டத்திலும் தற்போது மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் மின்சக்தியானது முற்றிலும், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் தொகுப்பிற்கு வழங்கப்படும்.

இதையடுத்து தொப்பளாக்கரை, சேதுபுரம், செல்லையா செழியநல்லூர் ஆகிய பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நெய்வேலியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு, இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் பேசுகையில், என்.எல்.சி. நிறுவனம் புதிய பார்வையுடன், உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. நமது சந்ததியினர் நலன் கருதி, நாம் அனைவரும் நமது பணியில், மேலும் சிறப்பாக பங்களித்து புதிய பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, என்.எல்.சி. இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுத்துறையுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி பணிக்கான ஒப்பந்தம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.

இதில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ். கணேசன் மற்றும் என்.எல்.சி. நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை பொது மேலாளர் வி. மனோகரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியை என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் சரத்குமார் ஆச்சார்யா, இயக்குனர்கள் ராகேஷ் குமார், சுபீர்தாஸ், தங்கபாண்டியன், விக்ரமன், சிறப்பு திட்ட அதிகாரி நாதள்ள நாகமோகன ராவ், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.