தறித்தொழிலாளி கொலை: ‘மனைவியுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்ததால் கொன்றேன்’ பரபரப்பு வாக்குமூலம்


தறித்தொழிலாளி கொலை: ‘மனைவியுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்ததால் கொன்றேன்’ பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 9:36 PM GMT)

மனைவியுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்ததால், தறித்தொழிலாளியை கொன்றேன் என்று கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆட்டையாம்பட்டி,

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள முத்தனம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41) என்பவரின் மனைவி தனலட்சுமிக்கும், சக்திவேலுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது சரவணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் அவர் சக்திவேலை கொலை செய்ய முடிவு செய்தார். இதன்படி நேற்று முன்தினம் சரவணன், தனது உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன், சக்திவேலை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவரை படுக்க வைத்து, தலையணையை கொண்டு முகத்தை அமுக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார்.

பின்னர் சக்திவேல், விஷம் குடித்து விட்டதாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றனர். டாக்டர்கள், சக்திவேல் இறந்து விட்டதாக கூறியதையடுத்து, உடலை, அவரது வீட்டுக்கு கொண்டு சென்று போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆட்டையாம்பட்டி போலீசார் விரைந்து சென்று, சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன், உறவினர்களான சேட்டு, சேகர் மற்றும் கனகு என்கிற கனகராஜ், மணிகண்டன் ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று போலீசார் சரவணன், கனகு என்கிற கனகராஜ், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சரவணன், சேட்டு, சேகர் ஆகியோர் உறவுமுறையில் சகோதரர்கள் ஆவார்கள். இதனிடையே கைதான சரவணன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனக்கும், எனது மனைவி தனலட்சுமிக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்தது. மேலும் சக்திவேலுடன் சேர்ந்து கொண்டு எனது மனைவி என்னை, உதாசீனப்படுத்தி வந்தார். இந்த நிலையில் எங்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தனலட்சுமி, தனது தந்தை வீட்டுக்கு கடந்த 11-ந் தேதி சென்று விட்டார்.

இதனிடையே நான் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்குமாறு மனு கொடுத்தேன். இதைத்தொடர்ந்து போலீசார் தனலட்சுமியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தனலட்சுமி என்னுடன் வர மறுத்து விட்டார். மேலும் 13-ந் தேதி திருமண நாளை வித்தியாசமாக கொண்டாடப்போகிறேன் என்று கூறி விட்டு தனலட்சுமி சென்றார்.

இதுமட்டுமின்றி சக்திவேல், எனக்கு போன் செய்து, 3 முறை கிண்டலாக திருமண நாள் வாழ்த்து தெரிவித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், எனது மனைவியுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருக்கும் அவரை கொன்றால் தான், வாழ முடியும் என முடிவு செய்தேன். இதற்காக சக்திவேலை நைசாக பேசி எனது வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தேன். என்னுடன் கனகு என்கிற கனகராஜ், மணிகண்டன், சேகர், சேட்டு ஆகியோரும் வந்தனர். அவர்கள் சக்திவேலின் கை, கால்களை பிடித்துக்கொள்ள, நான் தலையணையால் அமுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் விஷம் கு டித்து விட்டதாக கூறி, சேகரின் காரில் ஏற்றி, ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கு அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். பின்னர் உடலை சக்திவேலின் வீட்டுக்கு காரில் கொண்டு சென்று போட்டு விட்டு தப்பி ஓடி விட்டோம்.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கைதான சரவணன், கனகு என்கிற கனகராஜ் (30), மணிகண்டன் (31) ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சேட்டு, சேகர் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story