திருவிடைமருதூர் அருகே பயங்கரம்: பிரபல ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை


திருவிடைமருதூர் அருகே பயங்கரம்: பிரபல ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 15 Jun 2018 4:30 AM IST (Updated: 15 Jun 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் அருகே பிரபல ரவுடியை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் கொலை செய்தனர். மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி வழிமறித்து மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கர்ணகொல்லை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சுள்ளான் சதீஷ்(வயது 37). பிரபல ரவுடியான இவர், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பகோணத்தில் விக்ரம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சுள்ளான் சதீஷ் மீது கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.

நேற்று மாலை சுள்ளான் சதீஷ் திருநாகேஸ்வரத்துக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து தனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை உறவினர் ஓட்ட, பின்புறம் சுள்ளான் சதீஷ் அமர்ந்திருந்தார். சீனிவாசநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இவர்கள் வந்து கொண்டிருந்தபோது இவர்களை பின்தொடர்ந்து ஒரு வெள்ளை நிற கார் வந்தது.

அந்த கார் திடீரென சுள்ளான் சதீஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி சுள்ளான் சதீசும் அவருடைய உறவினரும் சாலையில் விழுந்தனர்.

உடனே காரில் இருந்து அரிவாள்களுடன் இறங்கிய மர்ம நபர்கள், சுள்ளான் சதீசை சுற்றி வளைத்து அவரது தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

உடனே கொலையாளிகள் தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர். கொலையாளிகள் சென்ற கார், சீனிவாசநல்லூர் அய்யாவாடி கட்டுக்கரை சாலையில் உள்ள மயானம் அருகே சென்றபோது திடீரென காரின் டயர் பஞ்சர் ஆனது. இதனால் கொலையாளிகள் காரை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுள்ளான் சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுள்ளான் சதீசுடன் வந்த அவரது உறவினர் சிறு காயங்களுடன் அருகே அமர்ந்திருந்தார்.

இந்த நிலையில் கொலையாளிகள் சென்ற கார் மயானம் அருகே நிற்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரை சோதனை யிட்டனர். அப்போது காரில் பெரிய அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. மேலும் காரில் ரத்தத் துளிகள் சிதறி இருந்தன.

சம்பவ இடத்துக்கு திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ஜெயகவுரி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். ஆனால் கொலையாளிகள் குறித்து முதற்கட்டமாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. கொலையாளிகள் வந்த காரையும் காரில் இருந்த ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழிக்குபழியாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவத்தால் சம்பவ இடத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் கும்பகோணம்-காரைக்கால் சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பிரபல ரவுடி ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story