மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஒப்பந்த பணியாளர்கள் சாலை மறியல்


மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஒப்பந்த பணியாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jun 2018 4:03 AM IST (Updated: 15 Jun 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரின் சாவுக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஒப்பந்த பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை,

திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரை சேர்ந்தவர் வைரமணி(வயது 28). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார். திடீரென்று இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

வைரமணியின் சாவுக்கு ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் தான் காரணம் என்று கூறி, அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் மற்ற பணியாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து விட்டு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனைக்கூடம் முன்பு நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று ஆஸ்பத்திரி முன்புள்ள பனகல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வைரமணி தற்கொலைக்கு காரணமாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதைதொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ரத்ததான முகாமில் கலந்து கொள்வதற்காக வந்த மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் இதுதொடர்பாக கேட்டபோது, “ஊழியரின் தற்கொலை சம்பவம் எனது கவனத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவன மேலாளர் மீது உள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஆஸ்பத்திரி டீனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Next Story