எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க 3 மாத அவகாசம் வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு மனு


எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க 3 மாத அவகாசம் வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு மனு
x
தினத்தந்தி 15 Jun 2018 4:21 AM IST (Updated: 15 Jun 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கு அமைய உள்ளது என்பதை அறிவிக்க மேலும் 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை எந்த இடத்தில் அமைப்பது என்பதை முடிவு செய்ய மத்திய அரசு சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து ‘ஜூன் மாதம் 14-ந்தேதிக்குள் (அதாவது நேற்று) எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை ஜூன் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில் மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் சஞ்சய்ராய் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள மதுரை தோப்பூர், புதுக்கோட்டை, தஞ்சை செங்கிப்பட்டி, ஈரோடு பெருந்துறை, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் எந்த இடத்தை தேர்வு செய்வது என்பதற்காக தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வருகிற 18-ந்தேதி கூடுகிறது. அப்போது 5 இடங்களில் எதை தேர்வு செய்வது என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.

பின்னர் இறுதி முடிவு எடுக்க 3 மாதம் ஆகிவிடும். எனவே தமிழகத்தில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை அறிவிக்க மேலும் 3 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருகிற 20-ந்தேதி பிரதான வழக்கு விசாரணையின்போது இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்பட உள்ளது.

Next Story