பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2018 4:44 AM IST (Updated: 15 Jun 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

சி.நம்மியந்தல் கிராமத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கலசபாக்கம்,

சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையானது தொழில் நகரங்களான சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்றுலா தலங்களான திருவண்ணாமலை, ஊட்டி, ஏற்காடு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் சி.நம்மியந்தல் கிராமத்தில் இந்த பசுமை வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பசுமை வழிச்சாலைக்காக எங்கள் பகுதியில் 150 ஏக்கர் நிலம் கைப்படுத்தும் நிலை உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபடுவார்கள் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story