சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை


சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை
x
தினத்தந்தி 15 Jun 2018 5:13 AM IST (Updated: 15 Jun 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்களுடன் பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா ஆலோசனை நடத்தினார். பின்னர் தோல்வி அடைந்தவர்களிடம், தோல்விக்கான காரணம் குறித்து தேவேகவுடா கேட்டறிந்து கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேவேகவுடா பேசியதாவது:-

ஜனதாதளம்(எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மாநில மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை அறிவித்து இருந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டங்களில் ஏராளமான மக்கள் கூட்டமாக திரண்டு வந்து கலந்து கொண்டார்கள். அந்த கூட்டம் நமது கட்சிக்கு கிடைத்த ஆதரவு என்று கருதினேன். ஆனால் அந்த மக்கள் கூட்டம் ஓட்டுகளாக மாறவில்லை. இதனால் தான் ஜனதாதளம்(எஸ்) கட்சி 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நமது கட்சிக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இது மிகுந்த வேதனையை அளித்தது.

ஜனதாதளம்(எஸ்) மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. தோல்வியால் யாரும் துவண்டு போய் விடக்கூடாது. தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் மனம் உடைந்து போகக்கூடாது. தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும். தாங்கள் போட்டியிட்டு தோல்வி அடைந்த தொகுதிகளில் கட்சியை பலப்படுத்த முன் வரவேண்டும். தற்போது மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை பிரபலப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்காக அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார். 

Next Story