ஊட்டி மலைப்பாதையில் அரசு பஸ் உருண்டு விபத்து: சிகிச்சை பலனின்றி கண்டக்டர் சாவு
ஊட்டி மலைப்பாதையில் அரசு பஸ் உருண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த கண்டக்டர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
கோவை,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் காலை 11.15 மணியளவில் புறப்பட்டது. அந்த பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். பஸ்சை ஊட்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38) என்பவர் ஓட்டினார். ஊட்டி அருகே குருத்துக்குழியை சேர்ந்த பிரகாஷ் (42) என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ் ஊட்டி– குன்னூர் மலைப்பாதையில் மந்தாடா பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வலது புறத்தில் இருந்த 150 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது. இதில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர், கண்டக்டர் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கோர விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஊட்டி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் குன்னூரை சேர்ந்த அல்மாஸ் என்ற பெண் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த மூர்த்தி என்பவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தவர்களில் கண்டக்டர் பிரகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கண்டக்டர் பிரகாஷ் நேற்று அதிகாலை 3 மணியளவில் பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த சாந்தி மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சாந்திக்கு இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. மேலும் அவருக்கு உடல் முழுவதும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அவருக்கு இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனந்தன் என்பவர் வயிற்றில் அடிபட்டு மண்ணீரல் பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கண்டக்டர் பிரகாஷ் இறந்ததை தொடர்ந்து ஊட்டி பஸ் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரகாசின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் இறந்த அரசு பஸ் கண்டக்டர் பிரகாஷ் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர். கோவை அரசு ஆஸ்பத்திரி சவ கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. யு.ஆர்.கிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கார்த்திக், பாலமுரளி, நீலகிரி மண்டலத்தை சேர்ந்த பிரபாகர், திப்பன் உள்பட நிர்வாகிகள், கண்டக்டர் பிரகாஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.