ஊட்டி பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆறுதல்
ஊட்டி பஸ் விபத்தில் சிக்கி காயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கோவை,
நீலகிரி மாவட்டம் ஊட்டி–குன்னூர் மலைப்பாதையில் மந்தாடா என்ற இடத்தில் நேற்று முன்தினம் அரசு பஸ் 150 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். காயம் அடைந்த 9 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று மதியம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு, ஊட்டி மலைப்பாதை விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி சிகிச்சை பெற்று வரும் சின்னான், நாகேஸ்வரன், வால்பாறை சின்கோனா பகுதியில் சிறுத்தையால் தாக்கப்பட்டு காயமுற்று சிகிச்சை பெற்று வரும் மாதவி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் சின்கோன பகுதியில் சிறுத்தை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வனத்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:–
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பஸ் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்து உயர்சிகிச்சை வேண்டி 15 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 6 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதியுள்ள 9 பேருக்கு சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் விரைவில் தங்களது வீடுகளுக்கு திரும்ப உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்த உடன் சுகாதாரதுறை அமைச்சரும், போக்குவரத்து துறை அமைச்சரும் போதிய குழுக்களை அனுப்பி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு உள்ளது. வால்பாறையில் சிறுத்தை தாக்கிய பெண் மற்றும் கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் யானை தாக்கிய 2 பேர், மழையால் பாதிக்கப்பட்ட 2 பேர் என அனைவருக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சட்டசபையில் முதல்–அமைச்சர் 900 பேருக்கு நிவாரண நிதியை அறிவித்தார் அதேபோல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் சட்டப்படி நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.