மாவட்ட நிர்வாகம், பொதுமக்களோடு இணைந்து தேனி ராஜவாய்க்காலை மீட்க புதிய முயற்சி


மாவட்ட நிர்வாகம், பொதுமக்களோடு இணைந்து தேனி ராஜவாய்க்காலை மீட்க புதிய முயற்சி
x
தினத்தந்தி 16 Jun 2018 3:45 AM IST (Updated: 16 Jun 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் தூர்ந்துபோன ராஜவாய்க்காலை பொதுமக்களோடு இணைந்து மீட்பதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் கால் நூற்றாண்டு கால கனவு நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தேனி,

போடி கொட்டக்குடி பகுதியில் உருவாகும் கொட்டக்குடி ஆறு தேனி பங்களாமேடு கூட்டாறு பகுதியில் முல்லைப்பெரியாற்றுடன் சங்கமிக்கிறது. கொட்டக்குடி ஆற்றில் தேனி பள்ளிவாசல் தெரு அருகே தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணையில் மதகு அமைத்து, பள்ளிவாசல் தெரு, பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, அரண்மனைப்புதூர் விலக்கு வழியாக கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தாமரைக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டது. இந்த வாய்க்கால் தேனி ராஜவாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வாய்க்கால் குளிப்பது, குடிநீர் பிடித்து பயன்படுத்துவது, மீன்பிடிப்பது என மக்களின் நெருங்கிய பயன்பாட்டில் இருந்தது. இந்த வாய்க்கால் சுமார் 2½ கிலோமீட்டர் நீளம் கொண்டது. வாய்க்கால் மற்றும் வாய்க்காலின் இருபுறமும் நடைபாதை இருந்தது.

இந்த வாய்க்காலை நம்பி நேரடி பாசனமாக 222.27 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வந்தது. தாமரைக்குளம் கண்மாய் மூலம் 111.54 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. காலப்போக்கில் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர்மண்ட தொடங்கியது. வாய்க்கால் கரைப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாய்க்கால் பரப்பளவு குறுகியது.

நாளடைவில் வாய்க்கால் பல இடங்களில் தூர்ந்து போய்விட்டது. தற்போது பாம்புகள் தங்கும் இடமாகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவுநீர் கலக்கும் இடமாகவும் வாய்க்கால் மாறிவிட்டது. வாய்க்கால் தூர்ந்து போனதால், இதை நம்பி இருந்த விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. நெல்லும், காய்கறிகளும் சாகுபடி செய்த நிலங்களில் தற்போது மாடுகளுக்கான தீவனப்புற்கள் மட்டுமே வளர்க்கப்பட்டு வருகின்றன.

வாய்க்காலை தூர்வாரி மீண்டும் தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால் நூற்றாண்டு காலமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசும், ஆட்சியாளர்களும் மாறி, மாறி வந்தாலும் இந்த வாய்க்காலை மீட்கும் முயற்சி மட்டும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தது. இந்த வாய்க்காலை தூர்வாரினால் தேனி நகரின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நகருக்குள் தண்ணீர் ஓடிய கால கட்டத்தில் நிலத்தடி நீர் சுமார் 100 அடியில் கிடைத்தது. தற்போது சுமார் 800 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலைமை உள்ளது.

வாய்க்காலை மீட்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் சிலர் மாவட்ட கலெக்டரை சந்தித்து வாய்க்காலை தூர்வார கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் சார்பிலும் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசிடம் நிதி கேட்டு தூர்வாரும் பணியை மேற்கொண்டால் அதற்குள் மழைக்காலம் தீவிரம் அடைந்து விடும் என்பதால், பொதுமக்கள் உதவியுடன் கால்வாயை தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாம் எனவும், மாவட்ட நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் வியாபாரிகளிடம் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உறுதி அளித்தார். அத்துடன் தேனி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜாராமை தொடர்பு கொண்டு ராஜவாய்க்காலை மீட்கவும், அதை மீட்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையையும் உடனே தனக்கு சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

பொதுமக்களோடு இணைந்து மாவட்ட நிர்வாகம் இந்த வாய்க்காலை தூர்வார முன்வந்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து தேனி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பொன்முருகன் கூறுகையில், ‘ராஜ வாய்க்காலை தூர்வார வேண்டும் என்பது தேனி மக்களின் நீண்டகால கனவு. இதுவரை எந்த அதிகாரிகளும் இதை தூர்வார முன்வரவில்லை. தற்போது பொதுமக்கள் ஒத்துழைப்புடன் வாய்க்காலை தூர்வார மாவட்ட கலெக்டர் முன்வந்துள்ளதை வரவேற்கிறோம். இதுதொடர்பாக கலெக்டர் எங்களிடமும், வணிகர் சங்க நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார். நாங்களும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தன்னார்வலர்களை கொண்ட குழு அமைக்கும் முயற்சியில் உள்ளோம். மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து விரைவில் தூர்வாரும் பணியை தொடங்க உள்ளோம்’ என்றார்.


Next Story