வாலிபரை கொலை செய்து உடலை பாறைக்குழியில் வீசிய சம்பவம்: ‘‘மனைவியை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதால் கொன்றேன்’’ கைதான தொழிலாளி வாக்குமூலம்


வாலிபரை கொலை செய்து உடலை பாறைக்குழியில் வீசிய சம்பவம்: ‘‘மனைவியை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதால் கொன்றேன்’’ கைதான தொழிலாளி வாக்குமூலம்
x
தினத்தந்தி 16 Jun 2018 4:30 AM IST (Updated: 16 Jun 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே வாலிபரை கொலை செய்து உடலை பாறைக்குழியில் வீசிய சம்பவத்தில், தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்குளி,

ஒடிசா மாநிலம் கோபால்பூர் பகுதியை சேர்ந்தவர் சு‌ஷந்தோ பெகேரா (வயது 26). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே நடுப்பட்டியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, எஸ்.பெரியபாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரை மர்ம ஆசாமிகள் கடத்திச்சென்று கொலை செய்து உடலை விஜயமங்கலம் மேட்டுக்கடை செல்லும் சாலையில் உள்ள பாறைக்குழியில் வீசி விட்டு சென்று விட்டனர்.

இந்த கொலை தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை தொடர்பாக இதற்கு முன்பு இவருடன் வேலை பார்த்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோகின்தர்நாத் பிரதான் (29) என்பவரை தேடிச்சென்றனர். அப்போது அவர் வீட்டை காலி செய்து விட்டு, ஒடிசா சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜோகின்தர்நாத் பிரதான் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடிக்க காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி மேற்பார்வையில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ஜோகின்தர்நாத் பிரதானை தேடி வந்தனர். அப்போதுதான், அவர் ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு திரும்பி வந்து ரெயில் நிலையத்தில் நிற்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம் சென்று அங்கு நின்று கொண்டிருந்த ஜோகின்தர்நாத் பிரதானை பிடித்து விசாரித்தனர். முதலில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். தொடர் விசாரணையில், சு‌ஷந்தோ பெகேராவை கொலை செய்து உடலை பாறைக்குழி தண்ணீரில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த கொலை வழக்கில் ஜோகின்தர்நாத் பிரதானை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஜோகின்தர்நாத் பிரதான் போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–

நானும், சு‌ஷந்தோ பெகேராவும் முதலில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தோம். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் காரணமாக சு‌ஷந்தோ பெகேரா, எனது வீட்டிற்கு அடிக்கடி வரத்தொடங்கினார். அப்போது எனது மனைவியுடன் நெருங்கி பழகினார். இந்த நிலையில்தான் நானும், அவரும் வேறுவேறு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றோம்.

ஆனாலும் சு‌ஷந்தோ பெகேரா வழக்கம் போல் எனது வீட்டிற்கு வந்து சென்றார். ஒரு கட்டத்தில் நான் வேலைக்கு சென்றதை தெரிந்து கொண்டு எனது மனைவி மட்டும் தனியாக இருக்கும்போது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எனது மனைவியை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி உள்ளார். இந்த விபரத்தை எனது மனைவி என்னிடம் தெரிவித்தார். இதனால் எனக்கு சு‌ஷந்தோ பெகேரா மீது வெறுப்பு ஏற்பட்டது. எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி அவரை விஜயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பாறைகுழிக்கு அவரை அழைத்து சென்று இரும்பிகம்பியால் தலையில் அடித்து கொன்று விட்டு உடலை பாறைக்குழியில் வீசி விட்டேன். பின்னர் நான் குடியிருந்த வீட்டை காலி செய்து, மனைவியை ஒடிசாவில் கொண்டு விட்டேன்.பின்னர் எதுவும் தெரியாது போல் மீண்டும் திருப்பூரில் வேலை பார்க்கலாம் என வந்தபோது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறுஅவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதைடுத்து கைதான ஜோகின்தர்நாத் பிரதானை, அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.


Next Story