தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது - வானதி சீனிவாசன் பேட்டி
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் கூறினார்.
ஈரோடு,
தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நேற்று ஈரோடு வந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வீடு இல்லாத ஏழை மக்கள் வீடு பெறும் வகையில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட இருக்கிறது. தமிழகத்திலும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்.
ரெயில் போக்குவரத்து அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் கோவை–பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதுபோல் விமான போக்குவரத்து அதிகமாகி இருக்கிறது. சென்னை–சேலம் விமான சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 25 புதிய விமான நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
பாரத பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து உள்ளது. இதனால் அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டினை இந்தியா ஈர்த்து உள்ளது. கருப்பு பண மீட்பு திட்டத்தை உலக நாடுகள் புகழ்ந்து உள்ளன.
எந்த ஒரு மத்திய மந்திரியும், மத்திய அமைச்சகமும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்படாமல் செயல்பட்டு வருகிறது. மத்திய பா.ஜனதா அரசின் நடவடிக்கை மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கியதால் தமிழகத்தில் மின்தடை இல்லாத நிலை உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
காவிரி நதிநீரை தமிழகத்துக்கு பெற்றுத்தர மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால் கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினர் கூட நியமிக்கவில்லை. பா.ஜனதா ஆட்சி அங்கு ஏற்பட்டு இருந்தால் சூழல் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
தமிழகத்தில் எது நடந்தாலும் அதற்கு பா.ஜனதாவும், மோடியும்தான் காரணம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கோர்ட்டுகளுக்கும் பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிபதிகள் பா.ஜனதாவின் பிரதிநிதிகள் இல்லை.
இவ்வாறு பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார். பேட்டியின்போது மாநில பிரசார அணி தலைவர் ஏ.சரவணன், மாநில செயலாளர் சி.கே.சரஸ்வதி, மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.