ஈரோட்டில் ரூ.2½ கோடி கடனில் வாங்கிய வாகனங்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்றவர் கைது


ஈரோட்டில் ரூ.2½ கோடி கடனில் வாங்கிய வாகனங்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்றவர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2018 4:15 AM IST (Updated: 16 Jun 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், ரூ.2½ கோடி கடனில் வாங்கிய வாகனங்களை போலி ஆவணங்கள் தயாரித்து விற்றவர் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக அவரது அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு பெருந்துறை ரோடு பழையபாளையம் பகுதியில் தனியார் வாகன நிறுவனத்தின் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2013–ம் ஆண்டு, சென்னிமலை பசுவப்பட்டியை சேர்ந்த துரைசாமி மகன்களான கோவிந்தசாமி (வயது 40), ஈஸ்வரமூர்த்தி (36) ஆகிய 2 பேரும் 38 சரக்கு வாகனம் வாங்குவதாக கூறினர்.

இதற்கு அதே வாகன நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் கடன் பெற்றனர். அதன் மூலம் கடந்த 2015–ம் ஆண்டு வரை 23 சரக்கு வாகனங்களை கோவிந்தசாமியும், ஈஸ்வரமூர்த்தியும் வாங்கினார்கள். பின்னர் அந்த 23 சரக்கு வாகனங்களுக்கும் கூடுதல் வசதிகள் செய்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்தனர்.

ஆனால் அவர்கள் 2 பேரும் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தவில்லை. இதனால் இதுதொடர்பாக நிதி நிறுவனம் சார்பில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 25–11–2017 அன்று புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அண்ணன் –தம்பிகளான கோவிந்தசாமி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதை மறைத்து போலி ஆவணங்கள் தயாரித்து வேறு நபர்களுக்கு சரக்கு வாகனங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் மோசடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்து ஏமாற்றியதையும் கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் ஈஸ்வரமூர்த்தி சென்னிமலை பகுதியில் அலைந்து திரிந்து வருவதாக ஈரோடு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னிமலைக்கு போலீசார் விரைந்து சென்று ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கோவிந்தசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story