ஒவ்வொரு கிராமங்களிலும் குப்பை கிடங்கு அமைத்து மகளிர் குழு மூலம் உரம் தயாரிக்க வேண்டும், அதிகாரிகளுக்கு கவர்னர் யோசனை


ஒவ்வொரு கிராமங்களிலும் குப்பை கிடங்கு அமைத்து மகளிர் குழு மூலம் உரம் தயாரிக்க வேண்டும், அதிகாரிகளுக்கு கவர்னர் யோசனை
x
தினத்தந்தி 16 Jun 2018 4:00 AM IST (Updated: 16 Jun 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு கிராமங்களிலும் குப்பை கிடங்குகள் அமைத்து மக்கும் குப்பைகளை பிரித்தெடுத்து மகளிர் குழுவினர் மூலம் உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி யோசனை தெரிவித்தார்.

பாகூர்,

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில் சேரும் குப்பைகள் டிராக்டர்கள் மூலம் கன்னியக்கோவில்–பாகூர் சாலையில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகின்றன. இப்படி சேர்க்கப்படும் இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. மர்ம ஆசாமிகள் இங்கு வந்து தீவைத்து விடுவது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதில் இருந்து வரும் நச்சு புகையால் சுற்றுச்சூழல் மற்றும் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. நேற்று முன்தினமும் இந்த குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்படுவதாக அங்குள்ள நிறுவனம் சார்பில் கவர்னர் கிரண்பெடிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி கவர்னர் கிரண்பெடி நேற்று (வெள்ளிக்கிழமை) நேற்று காலை கன்னியக்கோவில் குப்பை கிடங்கை ஆய்வு மேற்கொண்டார். அப்போது குப்பை கிடங்கு அருகில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன அதிகாரிகள் சதீஷ்குமார், கிரி ஆகியோர் தென் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து தான் ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறோம். நிறுவனத்தின் அருகில் உள்ள குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிவதால், ஆக்சிஜன் தரம் பாதிக்கப்படுவதாக என புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த நிறுவனத்திற்கு சென்ற கவர்னர் கிரண்பெடி, உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், தாசில்தார் கார்த்திகேயன், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கென்னடி, சீனுவாசராவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஒவ்வொரு கிராமங்களிலும் தனித்தனியாக குப்பை கிடங்கு அமைக்கவும், தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கும் குப்பைகளை கொண்டு மகளிர் குழு மூலம் உரம் தயாரிக்க வேண்டும். முதற்கட்டமாக, தொழிற்சாலைக்கு அருகில் உள்ள குப்பைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதற்கு உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கிரண்பெடி உத்தரவிட்டார்.


Next Story