திருச்சி பாலக்கரை: திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை பிரித்து விற்கும் குடோன் கண்டுபிடிப்பு


திருச்சி பாலக்கரை: திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை பிரித்து விற்கும் குடோன் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2018 5:15 AM IST (Updated: 16 Jun 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பாலக்கரையில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை பிரித்து விற்கும் குடோனை, வாகனத்தை பறிகொடுத்தவரே தனது நண்பர்களுடன் களத்தில் இறங்கி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி,

திருச்சி மாநகரில் இருசக்கர வாகன திருட்டுகள் சமீபகாலமாக அதிக அளவில் நடந்து வருகிறது. வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்கள், வெளியில் ஷாப்பிங் செல்லும்வேளையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போன்றவற்றை குறிவைத்து மர்ம கும்பல் ஒன்று திருடுவதை தொழிலாக கொண்டுள்ளது. மாநகர போலீசாருக்கு சவாலாக பலே திருட்டு ஆசாமிகள் கைவரிசை காட்டி வந்தனர். திருடப்பட்ட வாகனங்களையும், திருடர்களையும் அடையாளம் காணமுடியாமல் மாநகர போலீசார் தவித்து வந்தனர்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திருடப்பட்ட இரு சக்கர வாகனங்களை குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டு சென்று அங்கு என்ஜின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை கழற்றி அடையாளம் தெரியாமல் ஆக்குவதும், பின்னர் அவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதும் வாடிக்கை. அதே பாணியில் திருச்சி மாநகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை அடையாளம் தெரியாத வகையில் கண்டம் செய்து அவற்றை விற்பனை செய்யும் குடோன் ஒன்று திருச்சி பாலக்கரையில் நேற்று இரவு கண்டு பிடிக்கப்பட்டது. அதுவும் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்தவரே நண்பர்களுடன் களத்தில் இறங்கி வேட்டையில் ஈடுபட்டு கண்டுபிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார்(வயது35). இவர், மருந்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். தினமும் மோட்டார் சைக்கிளில் டாக்டர்கள் நடத்தும் கிளினிக் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தனது நிறுவன மாத்திரைகள் குறித்து எடுத்துரைத்து அவற்றை வாங்குவதற்கு பரிந்துரை செய்வது வழக்கம். சமீபத்தில் சரத்குமார் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி இருந்தார்.

நேற்று திருச்சி பட்டாபி ராமன் தெரு பகுதியில் உள்ள டாக்டர் ஒருவரை சரத்குமார் சந்திக்க சென்றார். ஆஸ்பத்திரிக்கு வெளியே தனது புதிய மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு டாக்டரை பார்க்க சென்றிருந்தார். திரும்ப வந்து பார்க்கையில் மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, தில்லை நகர் போலீசில் உடனடியாக புகார் கொடுத்தார்.

பின்னர் தனது நண்பர்கள் 3 பேரை சந்தித்து மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவத்தை சொல்லி வேதனைப்பட்டு கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள், இதுபோன்ற புதிய மோட்டார் சைக்கிளை திருடுபவர்கள் அதை அடையாளம் தெரியாத வகையில் பிரித்தெடுத்து வண்டியையே மாற்றி விற்பனை செய்து விடுவார்கள் என்றும், நாம் 4 பேரும் பழைய இரும்பு குடோன் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் பட்டறை பகுதிகளுக்கு சென்று தேடலாம் என்று யோசனை தெரிவித்தனர்.

அதன்படி, சரத்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் களத்தில் இறங்கி திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள இருசக்கர வாகன பட்டறை மற்றும் குடோன் உள்ளிட்ட பகுதிகளில் தேடத்தொடங்கினார்.

பாலக்கரை அண்ட கொண்டான் பகுதியில் உள்ள மெக்கானிக் குடோன் ஒன்றுக்கு இரவு 9 மணிக்கு 4 பேரும் சென்றனர். அப்போது அவர்களை பார்த்ததும் அங்கிருந்த மெக்கானிக் ஒருவர் ஓட்டம் பிடித்தார். சந்தேகப்பட்டு குடோன் உள்ளே பார்த்தபோது, அங்கு சரத்குமாரின் புதிய மோட்டார் சைக்கிள் என்ஜின் வேறு, வீல் வேறு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பகுதி பகுதியாக பிரித்தெடுக்கப்பட்டு கிடந்தது.

பின்னர் பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து, சரத்குமாரின் துண்டு துண்டாக கிடந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்றனர். பின்னர் குடோனையும் பூட்டினர். விசாரணையில் குடோன் உரிமையாளர் அசாருதீன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருச்சியில் மோட்டார் சைக்கிளை பறிகொடுத்தவரே தனது நண்பர்களுடன் தேடிச்சென்றபோது திருட்டு மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் குடோன் ஒன்றை கண்டுபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story