குழந்தைகளிடம் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும் - நீதிபதி சுமதி


குழந்தைகளிடம் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும் - நீதிபதி சுமதி
x
தினத்தந்தி 16 Jun 2018 5:00 AM IST (Updated: 16 Jun 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளை தனிமைப்படுத்தாமல், அவர்களிடம் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி தெரிவித்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம செவிலியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ச்சி பயிற்சி முகாம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி கலந்து கொண்டு பேசியதாவது:-

18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூகத்தில் பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. 18 வயதிற்குட்பட்ட குழந்தை பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு முதன்மை தேவையான மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும். இதற்கு முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) தேவையில்லை. சிகிச்சைக்கு பின்பு குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ அலுவலரால் உளவியல் ரீதியான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும். குழந்தைகளை தனிமைப்படுத்தாமல், அவர்களிடம் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தலைமை நீதித்துறை குற்றவியல் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், குற்றவியல் நீதிபதியும், முதன்மை நீதிபதியுமான மகாலெட்சுமி, துணை இயக்குனர் (சுகா தாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி முகமது யூனுஸ்கான், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story