நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு


நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 16 Jun 2018 4:45 AM IST (Updated: 16 Jun 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேராக மோதி விபத்திற்கு உள்ளானதில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நாமக்கல்,

நாமக்கல் டவுன் வசந்தபுரம் அருகே உள்ள வேப்பனம்புதூர் வடக்கு வீதியை சேர்ந்த மணியின் மகன் சுபாஷ்குமார் (வயது 34). இவருக்கு திருமணமாகி அருள்மொழி (30) என்ற மனைவியும், ரமணிஸ்ரீ (5), நித்திஸ்குமார் (3) என 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர் நாமக்கல், சேலம் சாலையில் உள்ள ஒரு தனியார் கார் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பிறகு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் நாமக்கல் டவுன் திருச்சி சாலையில் உள்ள ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேராக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சுபாஷ்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நாமக்கல் அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (24) என்பவரும் படுகாயம் அடைந்தார். அவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story