குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 17 Jun 2018 3:00 AM IST (Updated: 16 Jun 2018 6:25 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, 

குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அருவிகளில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. சாரல் மழை விட்டு விட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் குற்றாலத்தில் வெயில் அடித்தது. மதியம் சுமார் 12 மணிக்கு வெயில் குறைந்து மேக மூட்டம் உருவானது. திடீரென இந்த நிலை மாறி பலத்த சாரல் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

முதலில் ஐந்தருவியில் பழுப்பு நிறத்துடன் தண்ணீர் கொட்டியது. உடனடியாக பாதுகாப்பிற்காக நின்ற போலீசார் அருவிகளில் குளித்துக் கொண்டிருந்தவர்களை வெளியேற்றி குளிக்க தடை விதித்தனர். இதன் பிறகு சிறிது நேரத்தில் மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் குளிக்க போலீசார் தடை விதித்தனர். ஆனாலும் சுற்றுலா பயணிகள், போலீசாரிடம் தங்களை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்–இன்ஸ்பெக்டர் மாதவன் சிலரை மட்டும் ஓரமாக நின்று குளிக்க அனுமதித்தனர். சிறிது நேரத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் உடனடியாக போலீசார் சுற்றுலா பயணிகளை அங்கிருந்து வெளியேற்றினர்.

புலியருவியில் கூட்டம் அலைமோதியது

இந்த நேரத்தில் பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். 3 அருவிகளிலும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் புலியருவியில் அலை மோதியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் தடை எப்போது நீங்கும்? என்று 3 அருவிக்கரைகளிலும் காத்து நின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் அவ்வப்போது இதனை சீர் செய்தனர். இன்றும் குற்றாலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story