வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்துள்ளோம் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பேட்டி

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்துள்ளோம் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பேட்டி
x
தினத்தந்தி 17 Jun 2018 2:30 AM IST (Updated: 16 Jun 2018 8:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்துளோம். இதுதொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியுள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்துளோம். இதுதொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–

248 பேர் கைது 

தூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்ட, கலவரத்துக்கு காரணமான அரசு மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய 248 நபர்கள் தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கலவரம் தொடர்பாக போலீசார் பெண்கள், குழந்தைகள் யாரையும் கைது செய்யவில்லை. அவர்களை துன்புறுத்தவும் இல்லை. கலவரத்தில் ஈடுபட்டவர்களை தவிர வேறு யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.

வதந்திகள் 

தூத்துக்குடியில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. இந்த அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் கலவரம் தொடர்பாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். வதந்திகளை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை.

என்னுடைய செல்போன் எண் 99524–23555. பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக மக்கள் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story