குடிநீர் தட்டுப்பாடு ஒரு குடம் ரூ.10 வரை விற்பனை


குடிநீர் தட்டுப்பாடு ஒரு குடம் ரூ.10 வரை விற்பனை
x
தினத்தந்தி 16 Jun 2018 10:45 PM GMT (Updated: 16 Jun 2018 6:44 PM GMT)

அய்யகோன்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஒரு குடம் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள கவிநாடு மேற்கு ஊராட்சியில் அய்யகோன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தோம்.ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் தினமும் காலை வேளையில் குடிநீருக்காக சில மணி நேரத்தை செலவு செய்கிறோம். இருப்பினும் எங்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அய்யகோன்பட்டியில் பழுதடைந்த நிலையில் உள்ள அடிபம்பிற்கு பதிலாக மின்மோட்டாருடன் கூடிய சிறிய குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும்.

தினமும் வல்லத்திராக்கோட்டையில் இருந்து தனியார் வாகனங்களில் கொண்டு வரும் குடிநீர் ஒரு குடம் ரூ. 7 முதல் ரூ.10 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தான் திருவப்பூர் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வரை காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் கிராமத்திற்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.எனவே அய்யகோன்பட்டி கிராமத்திற்கு காவிரி குடிநீர் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.மேலும் எங்கள் கிராமத்தில் சேதமடைந்து உள்ள சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story