ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மரம் முறிந்து விழுந்தது


ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மரம் முறிந்து விழுந்தது
x
தினத்தந்தி 16 Jun 2018 10:15 PM GMT (Updated: 16 Jun 2018 6:59 PM GMT)

ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்றில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நின்ற மரம் முறிந்து விழுந்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் ஈரோட்டில் வெயில் அடித்தது. மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 4.20 மணி அளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதைத்தொடர்ந்து இடி –மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது.

இந்த மழை 20 நிமிடங்கள் வெளுத்து வாங்கியது. இதனால் மழைநீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து ஓடியது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்ததால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும் பலத்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நின்றிருந்த ஒருமரமும் முறிந்து விழுந்தது.

ஈரோடு நேதாஜி ரோடு, பிரப் ரோடு, ஆர்.கே.வி.ரோடு, கொங்காலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் சிரமப்பட்டனர். இந்த மழையால் நேற்று இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

இதேபோல் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை சூறாவளிக்காற்றுடன் கனமழையாக கொட்டித்தீர்த்தது. அதன்பின்னர் சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. மேலும் அந்தியூர், ஆப்பக்கூடல், பருவாச்சி, நகலூரில் நேற்று மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை சாரல் மழை பெய்தது.


Next Story