மானாமதுரை கோட்டத்தில் தொடர்ந்து பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் போலீசார் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்களா?


மானாமதுரை கோட்டத்தில் தொடர்ந்து பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் போலீசார் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்களா?
x
தினத்தந்தி 17 Jun 2018 3:45 AM IST (Updated: 17 Jun 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை கோட்டத்தில் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் போலீசார் பலரும் தொடர்ந்து பிரச்சினையில் சிக்கிக்கொள்கின்றனர்.

மானாமதுரை,

மானாமதுரை போலீஸ் கோட்டத்தில் மானாமதுரை, சிப்காட், திருப்புவனம், பழையனூர், திருப்பாச்சேத்தி, பூவந்தி உள்பட 7 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் 10 முதல் 15 ஆண்டு காலமாக பெரும்பாலான போலீசார் பணிபுரிகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுதல் என்ற பெயரில் மானாமதுரையில் இருந்து சிப்காட், திருப்பாச்சேத்தியில் இருந்து பழையனூர் என அருகில் உள்ள நிலையங்களுக்கே மாறுதல் வாங்கி 3 ஆண்டு பணியாற்றிவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்து விடுகின்றனர். போலீசார் பலரும் சொந்த பிரச்சினைக்காக கிராமமக்களிடையே மோதலை தூண்டும் வகையில் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே சாதி ரீதியாக மோதலை உண்டாக்குவதாக போலீசார் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றாற்போல் மானாமதுரை போலீசார் இருதரப்பினர் பிரச்சினையில் கட்ட பஞ்சாயத்து நடத்துவதாகவும் புகார் கூறப்படுகிறது.

கச்சநத்தம் மோதல் சம்பவத்தில் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், அவர்களே பிரச்சினைகளை தூண்டி விடுவதாகவும் பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்புவனம் இன்ஸ்பெக்டர் பத்திரிக்கையாளரிடம் தகராறு செய்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் பெரும்பாலான புகார்களில் உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்கிடையில் நேற்று முன்தினம் அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் பெண் போலீசார் செய்த பிரச்சினையால், உள்ளூர் போலீசாரிடம் அவர் கொடுத்த தகவலை வைத்து போலீசாரும் சரியாக விசாரிக்காமல் போக்குவரத்துக்கழக ஊழியர்களை தாக்கி சிக்கலாக்கிவிட்டனர். இதுபோன்று தொடர்ந்து மானாமதுரை கோட்டத்தில் பணியாற்றும் போலீசார் பிரச்சினையில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதில் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story