ஊட்டியில் விபத்து: ஆட்டோ டிரைவர் சாவு: சுற்றுலா பயணிகள் 2 பேர் படுகாயம்
ஊட்டியில் வேன் மீது ஆட்டோ மோதி ஆட்டோ டிரைவர் பலியானார்.
ஊட்டி,
சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் குரு. அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். வார விடுமுறையையொட்டி குரு எனது தனது மனைவி கவிதா (வயது 36), மகள் சோனாசி (9) ஆகியோருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று சுற்றுலா வந்தார். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு வாடகை ஆட்டோவில் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடகா பூங்காவுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
ஆட்டோவை ஊட்டி ஆர்.கே.புரத்தை சேர்ந்த சண்முகம் (42) என்பவர் ஓட்டினார். பெர்ன்ஹில் பகுதியில் இருந்து தீட்டுக்கல் செல்லும் சாலையில் ஆட்டோ சென்ற போது, ஆட்டோவின் பக்கவாட்டில் உள்ள தார்பாய் காற்றில் பறந்ததால் டிரைவர் இழுத்து உள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த வேன் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த சண்முகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே சண்முகம் பரிதாபமாக இறந்து விட்டார். குரு காயமின்றி தப்பினார். மேலும் படுகாயம் அடைந்த கவிதா, சோனாசிக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.