டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதுபான பாட்டில்கள் கொள்ளை
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோபால்பட்டி,
திண்டுக்கல்லை அடுத்த கோபால்பட்டியில், பாறைப்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக தாடிக்கொம்புவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 47), விற்பனையாளர்களாக அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன், கோபால்பட்டியை சேர்ந்த பவுல் ஏஞ்சல் ஸ்டீபன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலை முடிந்து ஊழியர்கள், கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை 7 மணி அளவில் டாஸ்மாக் கடை வழியாக தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து விற்பனையாளர் பவுல்ஏஞ்சல் ஸ்டீபனுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அவர், உடனடியாக டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபான பாட்டில்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், உயர் அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். பின்னர் கடையின் இருப்பை ஆய்வு செய்தபோது, மொத்தம் 124 மதுபான பெட்டிகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
நேற்றுமுன்தினம் மாலை வரை 300 மதுபான பெட்டிகள் விற்பனைக்காக இருந்துள்ளது. இரவு 7 மணி அளவில் மேலும் 280 மதுபான பெட்டிகள் லாரி மூலம் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. அதனை சரிபார்த்து விற்பனை கணக்கை முடித்துவிட்டு இரவு 10.30 மணிக்கு பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள், மதுக்கடையின் பூட்டை உடைத்து 124 மதுபான பெட்டிகளை மட்டும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து கொண்டனர்.
இதற்கிடையே கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கடையை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் திண்டுக்கல் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி, போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால் ஆகியோரும் விசாரணை நடத்தினர்.
கடந்த மாதம் திண்டுக்கல் அருகே ராஜக்காபட்டியை அடுத்த பூசாரிபட்டியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் கொள்ளை போனது. அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.