துப்பாக்கிசூட்டை கண்டித்து நாளை தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடத்த கம்யூனிஸ்டு கட்சிக்கு அனுமதி, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாளை (திங்கட்கிழமை) பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தூத்துக்குடியில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து நாளை(18–ந் தேதி) பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்த முடிவு செய்தோம்.
இதில் எங்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், மத்திய குழுஉறுப்பினர்கள் வாசுகி, சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இதற்கு அனுமதி கேட்டு தூத்துக்குடி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தோம். ஆனால் அவர் எங்கள் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து எங்கள் கட்சி சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நேற்று கோர்ட்டு விடுமுறை என்பதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை ஏற்று இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பிற்பகலில் விசாரித்தார்.
முடிவில், ‘‘மனுதாரர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. 18–ந் தேதி (நாளை) மாலை 6 மணி முதல் 8 மணி வரை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்கள் பிருந்தாகாரத், வாசுகி ஆகியோர் மட்டும் பேச வேண்டும். வரவேற்புரை, நன்றியுரையை மனுதாரர் பேச வேண்டும். ஆயிரம் பேர் வரை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படும். கூட்டம் முழுவதையும் போலீசார் வீடியோ பதிவு செய்ய வேண்டும். உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’’ என்ற நிபந்தனையுடன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.