குவாரியில் எந்திரம் மூலம் கல் உடைப்பு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை


குவாரியில் எந்திரம் மூலம் கல் உடைப்பு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Jun 2018 4:30 AM IST (Updated: 17 Jun 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே கல் குவாரியில் எந்திரம் மூலம் கல் உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள சுந்தரராஜபுரத்தில் கல்குவாரிகள் உள்ளன. அதில் உள்ள ஒரு குவாரியை கச்சிராயன்பட்டியை சேர்ந்த ஒருவர் அரசிடமிருந்து ஏலம் எடுத்து ஒப்பந்தம் மூலமாக குவாரியை நடத்தி வருகிறார். இதுபோல சிலர் இங்குள்ள குவாரிகளை ஒப்பந்த அடிப்படையில் அரசிடமிருந்து ஏலம் எடுத்து நடத்தி வருகின்றனர்.

கல்குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் அரசின் விதிகளை மீறாமல் குவாரிகளை பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒரு நிபந்தனையாக குவாரியில் உடைகல், ஜல்லி மற்றும் கல்லுக்கால் எடுப்பதற்கு, கல் உடைக்கும் தொழிலாளர்கள் மூலமாக கையால் கற்களை உடைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்தநிலையில் கச்சிராயன்பட்டியை சேர்ந்த ஒப்பந்ததாரர் அரசின் நிபந்தனையை மீறி குவாரியில் எந்திரம் மூலமாக கல் உடைத்து வந்தாராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற கல்குவாரி ஒப்பந்ததாரர்களும், அந்த பகுதி பொதுமக்களும் நேற்று திடீரென, எந்திரம் மூலம் கல் உடைக்கும் குவாரியை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story