நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது, மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி
நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
ராஜஸ்தானை சேர்ந்தவர் மகேந்திர ஜெயின்(வயது 40). இவர் கடந்த 2015–ல் மதுரையில் வீட்டு உபயோக பொருள்களை மாதாந்திர தவணை முறையில் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் விற்பனை செய்து வந்தார். பின்னர் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நிதி நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிதி நிறுவனத்தில் மதுரை, விருதுநகர், ராஜபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் பணம் முதலீடு செய்தனர். ரூ.1½ கோடி வசூலான நிலையில் பொதுமக்களுக்கு பணம் திருப்பி கொடுப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து, நிறுவனத்தை நடத்திய மகேந்திர ஜெயின் உள்பட அனைவரும் தலைமறைவாகினர். இதுதொடர்பாக முதலீடு செய்தவர்கள் அளித்த புகாரின்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மகேந்திர ஜெயின் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் மகேந்திர ஜெயினை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
மகேந்திர ஜெயினிடம் விசாரித்தபோது, நிதி நிறுவனம் தொடங்குவதற்கு ஆலோசனைகள் அளித்த முக்கிய குற்றவாளி பற்றி திடுக்கிடும் தகவல் கிடைத்தது. முக்கிய குற்றவாளி காஷ்மீரை சேர்ந்த மோனாஸ் சவுத்திரி(38) என தெரியவந்தது. மேலும் அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகவும் மகேந்திர ஜெயின் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, மோனாஸ் சவுத்திரி பற்றி விமான நிலையங்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டன.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு மோனாஸ் சவுத்திரி துபாயில் இருந்து பெங்களூரு வந்திருப்பதாக மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெங்களூரு சென்று மோனாஸ் சவுத்திரியை கைது செய்து மதுரை அழைத்து வந்தனர். நிதி நிறுவன மோசடி குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.