புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் புதுவை, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் 2–வது மாடியில் மருத்துவ ஆவண பதிவேட்டு அறை உள்ளது. இங்கு நோயாளிகளின் பற்றிய பதிவேடுகள் சேகரித்து வைக்கப்படும்.
இதன் அருகில் உள்ள அறைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை ஆவண பதிவேட்டு அறையில் திடீரென தீப்பிடித்து வேகமாக பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்திருந்த உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிட போராடி தீயை அணைத்தனர். அங்கு இருந்த கோப்புகள் அருகில் உள்ள அறைக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டன. அந்த அறையில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தால் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.