காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு


காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு
x
தினத்தந்தி 17 Jun 2018 5:04 AM IST (Updated: 17 Jun 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. அங்குள்ள கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து அடைந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

தர்மபுரி,

கேரளாவிலும், கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது சற்று குறைந்து இருக்கிறது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி, ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி மற்றும் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 98.20 அடி தண்ணீர் உள்ளது. (கடந்த ஆண்டு இதே நாளில் 67.78 அடி தண்ணீர் இருந்தது). அணைக்கு வினாடிக்கு 31,037 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 437 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு இதேபோன்று தொடர்ந்து நீடித்தால் இன்னும் 10 நாட்களில் அணை நிரம்பி விடும் என்று அணையின் என்ஜினீயர்கள் எதிர்பார்க்கிறார்கள். கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 26.60 அடியே பாக்கி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,922 அடி உயரம் கொண்ட ஹேமாவதி அணையில் 2,827.16 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 19,242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரம் கொண்ட ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,827.08 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த இரு அணைகளும் விரைவில் நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கே.ஆர்.எஸ். அணைக்கு வந்து சேரும்.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 2,282 அடியாக இருந்தது. இன்னும் 2 அடி நிரம்பினால் அணை முழுகொள்ளளவை எட்டிவிடும்.

கபினி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 36,650 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று நீர் வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக குறைந்ததால், திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை நேற்று இரவு வந்து அடைந்தது. அந்த இடத்தில்தான், கர்நாடகம் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடும் தண்ணீர் அளவிடப்படுகிறது. எனவே அந்த இடத்தில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழகத்துக்கு வந்து சேர்ந்த நீரின் அளவை கணக்கிட்டனர். இந்த தண்ணீர் ஒகேனக்கல்லை கடந்து விரைவில் மேட்டூர் அணையை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 39.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூரை வந்து சேரும் போது, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் கே.ஆர்.எஸ். அணை விரைவில் நிரம்பும் பட்சத்தில் அதில் இருந்து கூடுதல் தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்படும் என்பதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

Next Story