மாவட்ட செய்திகள்

மக்களை கவர்ந்த டாக்டர் + "||" + The doctor who impressed the people

மக்களை கவர்ந்த டாக்டர்

மக்களை கவர்ந்த டாக்டர்
ஆரம்ப சுகாதார மையத்தில் பணி புரிந்த மருத்துவரை பொதுமக்கள் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரம்ப சுகாதார மையத்தில் பணி புரிந்த மருத்துவரை பொதுமக்கள் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெயர் டாக்டர் கிஷோர் சந்திர தாஸ். பாழடைந்து கிடந்த சுகாதார மையத்தை அவர் தனியார் மருத்துவமனைக்கு ஈடாக நவீன வசதிகள் கொண்டதாக மாற்றி, மருத்துவ சேவை செய்ததே அதற்கு காரணம். அந்த மருத்துவ மையம் தெண்டுலிகுந்தி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. அங்கு 2008-ம் ஆண்டு கிஷோர் சந்திர தாஸ் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்பும் அங்கு ஏராளமான டாக்டர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.

பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை கொண்ட அளவிற்கு மருத்துவ மையத்தின் பராமரிப்பில் எந்த டாக்டரும் கவனம் செலுத்தவில்லை. மேலும் உயர்தர சிகிச்சைக்கான வசதிகள் எதையும் ஏற்படுத்தவும் அவர்கள் முன்வரவில்லை. ஆனால் கிஷோர் சந்திர தாஸ் நோயாளிகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தினார். உயர் சிகிச்சைகள் பெறுவதற்கு நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருந்ததால் அனைத்து வசதி களையும் சுகாதார மையத்திலேயே ஏற் படுத்த முடிவு செய்தார். அவருடைய தீவிர முயற்சியால் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பிரசவ அறைகள், ஆபரேஷன் தியேட்டர், செயற்கை சுவாச கருவி போன்ற வசதி கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சுகாதார மையத்திலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால் நெடுந்தூரத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். அதனால் கிஷோர் சந்திர தாஸ் பணி நேரத்தையும் கடந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்.

2014-ம் ஆண்டு அருகில் உள்ள கிராமத்தில் வயிற்றுப்போக்கால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது தனது மருத்துவ குழுவினருடன் அங்கு நேரடியாக சென்று சிகிச்சை அளித்தார். நோயாளிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தால் கிஷோர் சுற்றுவட்டார பகுதி மக்களிடமும் பிரபலமாகிவிட்டார். தற்போது புவனேஸ்வரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் முதுகலை படிப்பு படிக்க கிஷோர் முடிவு செய்திருக்கிறார். இந்த தகவலை கேள்விப்பட்டதும் அந்த பகுதி மக்கள் கண்கலங்கி போனார்கள்.

500-க்கும் மேற்பட்டவர்கள் ஊர் எல்லை வரை மேள தாளத்துடன் சென்று டாக்டர் கிஷோரை வழி அனுப்பி வைத் திருக்கிறார்கள். கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்திருக்கிறார்கள். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தால் ஒரு மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் உருவாகிவிட்டது. பொதுமக்கள் தன் மீது பொழிந்த அன்பை கண்டு கிஷோர் கண் கலங்கி விட்டார். படிப்பை முடித்ததும் மீண்டும் திரும்பி வந்து மருத்துவ சேவையை தொடருவதாக உறுதி அளித்துள்ளார். பொதுமக்கள் டாக்டரை கண் கலங்க வழி அனுப்பி வைக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஏராளமானவர்கள் டாக்டர் கிஷோருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.